Madras high court orders december 4th day round up tamil news

[12/4, 12:56] Sekarreporter 1: உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளில் பொதுமக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கிரிப்டோ கரன்சி குறித்து உரிய விதிகள் வகுக்காத நிலையில், இதுசம்பந்தமாக ஊடகங்களிலும் பெரிய அளவில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகக் கூறி, அதை தடுத்து நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முறைப்படுத்தப்படாத கிரிப்டோ கரன்சிகளில் பாதுகாப்பு அபாயம் உள்ளதாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளதாகவும், இந்த பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சிகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததால் அதை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக வட்டி தருவதாக கூறி, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கேரளாவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் சுட்டிகாட்டப்பட்டிய மனுதாரர், எந்த விதிமுறைகளும் இல்லாததால் கிரிப்டோ கரன்சிகள் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[12/4, 16:19] Sekarreporter 1: அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கோரி இந்து மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அண்ணல் அம்பேத்காரின் 65 ஆவது நினைவு நாள் டிசம்பர் 6 ஆம் தேதி வரவுள்ளது. அன்றைய தினம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கும் அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அருண் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜுன் சம்பத்தை யார் தடுத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்றத்தை அரசியல் தளமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரித்தார்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க காவல்துறையினர் அர்ஜுன் சம்பத்துக்கு அனுமதி மறுக்காத நிலையில், வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
…..
[12/4, 16:35] Sekarreporter 1: பட்டியலினத்தவரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் குற்றபத்திரிகை நகல் வழங்குவதற்காக நடிகை மீராமிதுனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி மீரா மீதுனுக்கும் சம்மன் அனுப்பிய நிலையில், மீரா மிதுன் தலைமறைவானார்.

பின்னர் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கிடையில் இருவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

அந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகியோரை டிசம்பர் 17ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
[12/4, 17:18] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்றத்தில்  அனைத்து வாயில்களும் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில்  சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது.

இதனால் ஜார்ஜ்டவுன், பாரிமுனை மற்றும் பூக்கடை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது.

நாளடைவில் மக்கள் உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி செல்வது அதிக தூரமாக இருப்பதாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.

இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள்  வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறை ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் முதல்வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிப்பது வழக்கம் அதன் படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என்றும் இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 
[12/4, 17:20] Sekarreporter 1: கோவில் சொத்துகளை தனியார் பயன்பாட்டிற்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது கடவுள் சொத்துகளின் மூலமாக இருக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியில் மெர்மெய்ட் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனம் கட்டிய குடியிருப்பில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையை அணுகக்கூடிய இடத்தில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 9600 சதுர அடி தரிசு நிலத்தை குத்தகைக்கு பெற்று, குடியிருப்பின் பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

குத்தகை முடிவடைந்த நிலையில் அதை நீட்டிக்க கோவில் செயல் அலுவலர் ஆட்சேபம் தெரிவித்ததால், 400 சதுர அடியை மட்டுமே தரத் தயாராக இருப்பதாகவும், அதையும் குத்தகை அடிப்படையில் இல்லாமல் 7000 ரூபாய் என்ற மாதாந்திர வாடகை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என 2017ஆம் ஆண்டு அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மெர்மெய்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நிலத்தை கோவில் நிர்வாகம் பயன்படுத்தாமல் இருப்பதால், எதிர்காலத்தில் பயன்படுத்தமாட்டார்கள் என முடிவெடுக்க முடியாது என்பதால், பாதைக்கு தேவைப்படும் நிலத்தை குத்தகை அடிப்படையில் வழங்கும்படி அறநிலையத்துறை மூலமாக மனுதாரர் நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என உத்தரவிட்டார். அதுவரை அறநிலையத்துறை உத்தரவை அமல்படுத்த அவசியம் இல்லை எனவும் அறிவுறித்தியுள்ளார்.

அதுகுறித்து, அனைத்து தரப்பும் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து, பரிசீலித்து உரிய முடிவெடுக்கலாம் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

கோவில் சொத்துகளை தனியார் பயன்பாட்டிற்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி முக்கியாமனதாக இருந்தால் கூட அது கடவுள் சொத்துகளின் மூலமாக இருக்கக் கூடாது எனவும் அறிவுறித்தியுள்ளார்.
[12/4, 17:42] Sekarreporter 1: யூடியூபர்ஸ் மதன் ரவிச்சந்திரன் மாரிதாஸ் அவர் மீது உதயநிதி ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார் அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி உதயநிதி ஸ்டாலின் வாக்குமூலம் அளித்தார் இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது இந்த வழக்கு பற்றி அவரது வக்கீல் விவேக் கூறும்போது மதன் ரவிச்சந்திரன் மாரிதாஸ் ஆகிய இருவரும் உதயநிதி ஸ்டாலின் பற்றியும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்கள் இதனால் அவர்கள் மீது அவதூறு வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார் அதில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார் இந்த வழக்கில் யூடியூபர்ஸ் இருவருக்கும் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது இந்த வழக்கு விசாரணையை வருகிற 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இது தவிர யூடியூபர்ஸ் மீது சிவில் வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்
[12/4, 20:47] Sekarreporter 1: நெற்பயிர் மீது டிராக்டர் ஏற்றி நாசம் செய்ததை வேடிக்கை பார்த்ததுடன், மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆரணி டி.எஸ்.பி.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள காமக்கூர் கிராமத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி மற்றும் சாவித்திரி ஆகியோர் குடும்பங்களுக்கு இடையே விவசாயம் நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது.

இருதரப்பினரும் அளித்த புகார்கள் குறித்து விசாரிக்கும்படி, வேலூர் டி,ஐ.ஜி., உத்தரவிட்டதால், ஆரணி டி.எஸ்.பி. ஜெரினா பேகம், கடந்த 2017ம் ஆண்டு காமக்கூர் கிராமத்துக்கு நேரடியாக சென்றார். அப்போது, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மீது சாமுண்டீஸ்வரி தரப்பினர் டிராக்டரை ஓட்டி அழித்ததாகவும், இதை டி.எஸ்.பி. வேடிக்கை பார்த்ததாகவும் சாவித்திரியின் கணவர் கிருஷ்ணன், டி.எஸ்.பி. ஜெரினா பேகத்துக்கு எதிராக திருவண்ணாமலையில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, ஜெரினா பேகத்துக்கு சம்மன் அனுப்பி கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜெரினா பேகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து, நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில், குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் படி, மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பின், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றாமல் நேரடியாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசின் முன்அனுமதியைப் பெறாமல் டி.எஸ்.பி. மீது தொடப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் கூறி, டி.எஸ்.பி. ஜெரினா பேகத்துக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், விவசாய நிலம் தொடர்பாக சாமுண்டீஸ்வரி தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மறைத்து சாவித்திரி தரப்பினர் போலீசில் புகார் செய்துள்ளதாகவும், இந்த விவரங்கள் தெரியாமல் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, கிருஷ்ணன் தரப்பினர் திட்டமிட்டு நடத்திய அரங்கேற்றிய நாடகத்தில் டி.எஸ்.பி. சிக்கிக் கொண்டதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
[12/4, 21:14] Sekarreporter 1: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை தரமற்ற முறையில் கட்டியதாகக் கூறி, கட்டுமான நிறுவனத்திற்கு அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ல் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால், ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

அதில், தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பி எஸ் டி நிறுவனத்துக்கு எதிராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என விளக்கம் அளிக்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்து பி.எஸ்.டி. நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, குடியிருப்புக்களை சரி செய்து தருவதாகவும், 93 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்த்து பணிகள் மேற்கொள்ள தடை விதித்தால் அது சீரமைப்புப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்து விடும் எனக் கூறி, அந்நிறுவனத்திற்கு எதிரான நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 6 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...