Madras high court orders march 15

[3/16, 11:00] Sekarreporter: திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் தேர்தலின்போது திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டு பின்னர் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கில் ஜெயக்குமாருடன் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகரான காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோர் இரண்டு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள் .

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அங்குள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
[3/16, 12:41] Sekarreporter: அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தது எதிர்த்து அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில்

இந்த மனு தொடர்பாக தேர்தல் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
[3/16, 16:04] Sekarreporter: தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடந்த விசாரணையின் போது பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வனப்பணிகள் (ஐ.எப்.எஸ்) அதிகாரிகள் அடங்கிய குழு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் ஆய்வு செய்யச் சென்ற குழு அறிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த மாநிலங்களில், 50 ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம், சீமை கருவேல மரங்கள், இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தப்படுவதாகவும், இரண்டு மூன்று ஆண்டுகள் அப்பகுதியை கண்காணித்து, மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளராமல் பார்த்துக் கொள்வதாகவும், சீமை கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களில் நாட்டு மரங்கள் நடப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

இதே நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகள் குழு அளித்த அறிக்கைகள், அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அரசு இந்த விஷயத்தில் விரைந்து கொள்கை முடிவெடுக்கும் எனவும் அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில், மரங்களை அகற்றும் நடவடிக்கையை தொடர அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது பொதுப்பணித் துறையின் பணியை தடுக்கும் வகையில் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுப்பணித் துறை மரங்களை அப்புறப்படுத்தவதை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[3/16, 16:04] Sekarreporter: தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் பணியாற்றியபோது தவறான அறிக்கைகளை தாக்கல் செய்ததாகவும், இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பத்திரிகையாளர் என வழக்கு தொடர்ந்துள்ள சேகரன் ஒரு போலி பத்திரிக்கையாளர் என பொன் மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசரணைக்கு வந்தபோது, தாங்கள் தொடர்ந்துள்ள வழக்கில் பிரஸ் கவுன்சில் அமைப்பது தொடர்பாக எந்த கோரிக்கையும் வைக்காத நிலையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தங்கள் வழக்கை ஆரம்பகட்டத்திலிருந்து மீண்டும் விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டுமென நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டனர்.

பின்னர் சேகரன் தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[3/16, 16:16] Sekarreporter: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்காக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் வைப்பு தொகையை நீதிமன்ற உத்தரவையடுத்து வட்டியுடன் மீண்டும் தமிழக அரசு அனுப்பப்பட்டது

கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு ஏதுவாக போயஸ் தோட்டம் இல்லத்தை அரசுடமையாக்குவதற்காக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு ரூ.68 கோடியை கடந்த 2020-ம் ஆண்டு டிபாசிட் செய்திருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் என ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கை உயர் நீதிமன்றம் அறிவி்த்த நிலையில், மற்றொரு வழக்கில் வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்றும், அரசு கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வேதா நிலையம் இல்லம் தொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பெருநகர 6-வது உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘வேதா நிலையம் இல்லத்துக்காக தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியிருந்த ரூ.68 கோடி டிபாசிட் தொகையை திரும்பப்பெறவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கு 6-வது உரமையியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எஸ்.ஷாஜகான் ஆஜராகி டிபாசிட் தொகை ரூ. 68 கோடியை வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும், என கோரினார். அதையடுத்து நீதிபதி அந்த தொகையை அரசுக்கு திருப்பி செலுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி நீதிமன்ற பதிவாளர் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த இந்த தொகை வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713 ஆக தென் சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
[3/16, 18:11] Sekarreporter: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான ஒரு அதிகாரியை நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தேவையான காவல்துறை பாதுகாப்பை வழங்க வேண்டுமென தஞ்சாவூர் எஸ்.பி.-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆடுதுறை பேரூராட்சியின் மறைமுக தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை பார்வையிட்ட நீதிபதிகள், வாக்குச் சீட்டை ஒருவர் பறித்து செல்கிறார். அவரை தடுக்காமல் தேர்தல் ஆணைய அதிகாரிகளும், காவல் துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தனர்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நடத்தும் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் 26க்கு பதிலாக மார்ச் 23ஆம் தேதியே மறைமுக தேர்தல் நடத்தபடும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மறைமுக தேர்தலை நடத்த சுதந்திரமான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும், அதற்கு தேவையான காவல்துறை பாதுகாப்பை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மீண்டும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தால், தேர்தல் அதிகாரிகள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என எச்சரித்துள்ளனர்.
[3/16, 18:40] Sekarreporter: சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், பேரூராட்சி மறைமுக தேர்தலில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவும், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி, நாகவள்ளி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலை தள்ளிவைத்ததை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்வான அதிமுக வார்டு உறுப்பினர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் காடையாம்பட்டி பேரூராட்சி மறைமுக தேர்தலில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததால் தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மற்ற மூன்று பேரூராட்சிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நான்கு பேரூராட்சிகளுக்கும் மார்ச் 26ல் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு, அதன் அறிவிப்பாணை தாக்கல் செய்யப்பட்டது.

இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், காடையாம்பட்டி பேரூராட்சியில் மறைமுக தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டும், தேவையான பாதுகாப்பை மாவட்ட எஸ்.பி. வழங்கவும் உத்தரவிட்டு, காடையாம்பட்டி வழக்கை மட்டும் முடித்துவைத்தனர்.

மற்ற மூன்று பேரூராட்சிகளில் சட்டம் ஒழங்கு பிரச்சினை ஏற்பட காரணம் என்ன என விளக்கம் அளிக்கவும், மார்ச் 4ஆம் தேதி எடுக்கப்பட்ட வீடியோ பதிவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்குகளின் விசாரணையை மார்ச் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...