Madras high court orders nov 26 th

[11/27, 07:25] Sekarreporter 1: நாமக்கல் அரியா கவுண்டம்பட்டி வீரபத்ர சுவாமி கோவில் சொத்தின் குத்தகை பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாமக்கல் மாவட்டம் அரியா கவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீரபத்ர சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலங்களை,குத்தகைக்கு எடுத்த ஐந்து பேர் குத்தகை பணம் தராமல் , அதன் மூலம் வரும் பணத்தை ஒப்படைக்காமல் தங்களது சொந்த செலவிற்கு பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
[11/27, 07:25] Sekarreporter 1: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் குளங்களை பாதுகாக்கவும், அடிப்படை வசதிகளைக் ஏற்படுத்தவும் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், பெரம்பலூர் அருள்மிகு பொன்னம்பல சுவாமி மற்றும் ஐய்யனார் கோயில்களை பார்வையிட்ட போது, கோயில் நிலங்கள் மற்றும் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கோயில் சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக வருவாய்த் துறை மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[11/27, 07:25] Sekarreporter 1: மகளிர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் ஒரு தீர்மானத்தை கொண்டு வரவுள்ளதாகவும், அது நிச்சயம் ஏகமனதாக சட்டமாக நிறைவேற்றப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் ஆணையத்தின் தலைவர் எஸ்.பாஸ்கரன், செயலாளர் விஜய கார்த்திகேயன், தமிழக அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, அதிமுக எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, அரசியலமைப்பு சட்டப்படி பனியாற்றுவேன் என பதவியேற்ற ஆளுனர், மதச்சார்பற்ற இந்தியாவை மதச்சார்புடைய நாடு என பேசியது வேதனை அளிப்பதாகவும் அதை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். பொறுமையாக பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும் என அப்பாவு அறிவுறுத்தி உள்ளார்.

வீடுகளில் வேலைப் பார்க்கும் பெண்களின் உரிமைகளை காக்கும் வகையில் வீட்டு வேலை பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்துடன் இணைக்கப்பட்டும், 85 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் உறுப்பினராக சேர்க்க வேண்டுமென சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.

மகளிர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக புதிய தீர்மானம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாகவும், அது சட்டமாக ஏகமனதாக நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்துள்ளார்.
[11/27, 07:25] Sekarreporter 1: பரனூர் விமான நிலையம், என்.எல்.சி, சிப்காட் போன்ற வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1997 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, 2016ஆம் ஆண்டில் சொற்ப தொகைதொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சிப்காட் சிறப்பு தாசில்தாரிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வசந்தா கங்காதரன், நவ்ஷீன் பாத்திமா, அம்ரீன் பாத்திமா, செய்தா மதீன், முகமது இம்ரான் ஆகிய நில உரிமையாளர்கள் தகவல் கேட்டனர். உரிய தகவல் வராததால் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு தாசில்தார் தரப்பில் கையகப்படுத்தபட்டதற்கான தொகை மாவட்ட கருவூலத்தில் உள்ளதாகவும், அந்த பில்களும் காலாவதியாகிவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சாலைகள், அரசு அலுவலங்கள் ஆகியவற்றுக்காக நிலத்தை கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முழு இழப்பீடு தொகையையும் அரசு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் தொழிற்பேட்டைகள் போன்ற வணிக நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வணிக பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை முழுவதும் தந்துவிட்டால் பணத்தை கையாள்வது தொடர்பாக அவர்களுக்கு தெரியாமல் அந்த தொகையை விரைவில் செலவு செய்துவிடுவார்கள் என்றும், மீதமுள்ள இழப்பீடு தொகைக்கு பதிலாக சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதியை நில உரிமையாளர்களுக்கு பங்காக தரலாம் எனவும், அப்போதுதன் நில உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில திட்டக்குழு உரிய சட்டத்தை கொண்டுவருவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
இதே நடைமுறையை பரனூர் விமான நிலைய திட்டத்திற்கும், நெய்வேலி நிலக்கரி கழக திட்டத்திற்கும் நிலம் கையகப்படுத்தும்போது செயல்படுத்தினால் நிலத்தை தரும் மக்களுக்கும் நம்பிக்கை வரும் என குறிப்பிட்டுள்ளார்.

நிலத்தை இழப்பவர்களும் ஏழைகள்தான் என குறிப்பிட்டுள்ள ஆணையம், அவர்களுக்கு இழப்பீடு வாங்கி தருவதற்காக சட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு செய்து தரவேண்டும் என்றும், இதன்மூலம் நிலத்திற்கான இழப்பீடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளும் விரைந்து தீர்த்துவைக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
[11/27, 07:25] Sekarreporter 1: தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன் காப்பாற்ற மாட்டோம் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கு ,காவல்துறை சார்பில் வழியனுப்பு விழா நடைபெறுவது வழக்கம்.ஓய்வு பெறக்கூடிய காவல்துறை அதிகாரிகளில், நீதிமன்றங்களுக்கும் , அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடத்தப்படுகிறது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்ற அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் ஓய்வு பெற உள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி
தாமரைக்கண்ணனுக்கு பாராட்டி வழியனுப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை தாங்கிய அரசு தலைமை குற்றவியல் அசன்முகமதுஜின்னா, வழக்குகள் விசாரணையின்போது குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு மிகச்சிறந்த முறையில் உதவிய கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
குற்றவியல் வழக்கறிஞர்கள் என்பவர்கள், காவல்துறை தரப்பு,குற்றவாளி தரப்பு என நீதிமன்றத்தின் முன்பு அனைவருக்கும் பொதுவானவர்கள் என தெரிவித்தார். தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன் நாங்கள் காப்பாற்ற மாட்டோம் என்றும் அதே வேளையில் நேர்மையான அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில்,
கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை சிறப்பாக நடத்தியவர், குடியரசு தலைவர் விருது பெற்றவர் செந்தாமரைக்கண்ணன் என்றும்,
வீரப்பன் தேடுதல் வேட்டையில் மிகப்பெரிய அளவில் அவர் உதவியதாக
பாராட்டி பேசினார்.
கூடுதல் டி ஜிபி தாமரைக்கண்ணன் பேசுகையில் , காவல்துறையினருக்கு நீதிமன்றங்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை என்றும் ,வழக்குப்பதிவு செய்தாலே பணி முடிந்தவிட்டதாக கருதுவதாக தெரிவித்தார். கடந்த ஒன்றை ஆண்டுகளாக, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரோடு ஒருங்கிணைந்த செயல்பட்டு, வழக்கு விசாரணைகளில் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல பங்கேற்றிருந்தனர்.
[11/27, 07:25] Sekarreporter 1: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ்.மோகன் நியமிக்கப்பட்டதை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரிய வழக்கில் பல்கலைகழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.பழனியப்பா தொடர்ந்துள்ள வழக்கில், துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழு மற்றும் தேர்வுக் குழு ஆகியவை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகவும், அவை மூலம் துணைவேந்தராக மோகன் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டது பல்கலைக்கழகத்தின் நலன்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தால் இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டவரை பல்கலைக்கழகத்தின் நிர்வாகி என ஏற்க முடியாது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தேடல் குழுவின் ஒரு உறுப்பினராக உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான செயலாளரை நியமித்திருப்பது விதிமீறல் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தேடுதல் குழுவில் புதுச்சேரி அரசின் நியமன உறுப்பினராக நியமிக்கபட்ட சென்னை ஐ.ஐ.டி.-யின் மின் பொறியியல் துறை பேராசிரியரான வி.ஜெகதீஷ் குமார் என்பவர், ஏற்கனவே புதுச்சேரி பொறியியல் கல்லூரி மற்றும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மோகனின் இடைநீக்கம் குறித்த உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டுமென இடைக்கால கோரிக்கை வைத்துள்ளார். மேலும், துணை வேந்தர் நியமனம் சட்டத்திற்கு புறம்பானது அறிவித்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பல்கலைகழக மானியக் குழு விதிகளை பின்பற்றி புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை. வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் நீதிபதி, வழக்கு குறித்து புதுச்சேரி அரசு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் துணை வேந்தர் மோகன் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[11/27, 07:25] Sekarreporter 1: ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் பேசியபோது, ஜனநாயக பாதுகாப்பு என்பது அடிப்படை உரிமைகளில் உள்ளதால், அதை காக்க வேண்டும் எனவும், மனித உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட வேண்டும் எனவும், தொழிலாளர் உரிமைகள் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவியான ஏ.எஸ்.குமரி பேசியபோது, நல வாரியம் பல நல்ல திட்டங்களை வழங்குவதாகவும், வீட்டு வேலைகளில் உள்ள பணியாளர்களின் இன்னல்களிலிருந்து காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாதிக்கப்படுவதாக உணரும் ஒவ்வொரு பணியாளரும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட புகார் மையங்களில் தெரிவிக்க வேண்டும் என்றும், 181 என்ற புகார் எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
[11/27, 07:25] Sekarreporter 1: அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்..சண்முகசுந்தரம் பேசியபோது, அரசியலமைப்புச் சட்டத்தில் முதன்முதலாக திருத்தம் கொண்டுவந்த பெருமை தமிழ்நாட்டிற்குத்தான் உள்ளது என்று தெரிவித்தார். மத்திய அரசை போல மாநில அரசும் வீட்டு வேலை பணியாளர்களுக்கான சட்டத்தை கொண்டு வர உறுதுணையாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

You may also like...