Madras high court orders october 14th mam case , mhaa case 7.5% case

[10/14, 10:48] Sekarreporter 1: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே உள்ள சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சங்கத்தில் சுமார் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர் .இந்த சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் .இதை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சத்தியபால் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கில் விதிகளை மீறி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அப்போதைய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தேர்தலுக்கு தடை விதித்தது. மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய தகுதிகளையும் அறிவித்தது. அதன்படி ஐந்து ஆண்டுகளில் 200 வழக்குகளில் நடத்தியவர்கள் தான் போட்டிட தகுதியானவர்கள்என்பன உள்ளிட்ட விதிகளை உருவாக்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் உத்தரவை சீராய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்து நீதிபதி மகாதேவன் முகமது சபீக் அமர்வு ஏற்கனவே இருந்த சங்கங்களின் சட்ட விதிகள் படியே தேர்தலை நடத்தலாம் என்று இன்று உத்தரவிட்டுள்ளனர்.
[10/14, 12:09] Sekarreporter 1: உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் தங்களை அலைக்கழித்ததாக குற்றம் சாட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை சேர்ந்த வேல்முருகன் என்பவர் இரு நாட்களுக்கு முன்பு தீக்களித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பலியான வேல்முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும் பழங்குடியினர் சான்றிதழ் கோரி கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி அவர் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் செப்டம்பர் 23ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று அவரது விண்ணப்பம் செப்டம்பர் 26ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகவும் தன்னுடைய சகோதரர் எனக் கூறி, பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளவரசன் என்பவரின் சான்றை தாக்கல் செய்திருக்கிறார் எனவும், இளவரசனுக்கும், வேல் முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து கள ஆய்வின்போது அண்டை வீட்டார்கள் இடமோ தெருவில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அண்டை வீட்டார்கள், வேல்முருகனின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், சகோதரர் எனக் கூறிய இளவரசனிடமும் விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[10/14, 12:34] Sekarreporter 1: தடை செய்யப்பட்ட அமைப்பின் கருத்துக்களை பரப்பியதால் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கிலிருந்து வழக்கறிஞரை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்தத்தை சமூக ஊடகத்தில் பரப்பியதாக உபா சட்டம் என அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வழக்கறிஞர் மோகன் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்ககோரி அவர் தொடர்ந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமையின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மோகன் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது மனுதாரர் தரப்பில், சமூக ஊடகங்களில் செய்திகளை பதிவேற்றுவதால், இந்திய தண்டனைச் சட்ட விதிகள் மற்றும் தேசத் துரோகத்தின் கீழ் உள்ள விதிகள் எதுவும் பொருந்தாது என்றும், உபா பயங்கரவாதச் செயல் என்பது உடல் ரீதியான செயல்களை மட்டுமே குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது. ஆட்சேபனைக்குரிய சமூக ஊடகப் பதிவு மூன்று நாட்களுக்குள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், சமூக ஊடகங்களில் பல ஹேஷ்டேக்குகளுடன் ஆட்சேபனைக்குரிய செய்தியை பதிவேற்றியதாகவும், பலரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியதாகவும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகநூல் பதிவை வாபஸ் பெறுவது மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு காரணமாக அமையாது என்றும், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், ஏழைகளைச் சுரண்டுவது போன்றவற்றில் இருந்து நாடு விடுபடவில்லை என்றும், சுதந்திரம் ஒரு கேலிக்கூத்து என்றும் செய்தி பரப்பியுள்ளதாகவும், உண்மையான சுதந்திரத்தைப் பெற நக்சல்பாரி காட்டிய போரின் பாதையில் அணிதிரள்வோம் என்றும் குறிப்பிட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரரை வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
[10/14, 13:26] Sekarreporter 1: மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி….

எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், தொழிலதிபருமான ஏ.சி.முத்தையா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

வாரிசு சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் பரிசீலிக்கப்படவில்லை என அறக்கட்டளை சார்பில் புகார்….

வாரிசு சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு முழு அதிகாரம் உள்ளது – அரசுத்தரப்பு….

மனுதாரர் எந்த தகுதியும் இல்லை; ரத்தசொந்தமும் இல்லை எனவும் அரசுத்தரப்பு வாதம்…

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று உயர் நீதிமன்றம் நிராகரிப்பு…

சிவில் நீதிமன்றத்தை அணுக உத்தரவு…
[10/14, 13:31] Sekarreporter 1: மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்து தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

செட்டிநாடு அறக்கட்டளை சார்பில் டாக்டர்.ஏ.சி முத்தையா கடந்த 2016 ம்ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். வழக்கில் எம்.ஏ.எம் ராமசாமியின் தந்தையும் தனது தந்தையும் சகோதரர்கள் என்றும் தாங்கள் நாட்டுகோட்டை நகரத்தார் சமுதயாத்தைச்சார்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். எம்.ஏ.எம் ராமசாமி கடந்த 1996 ம் ஆண்டு ஐயப்பன் என்பவரை தத்து எடுத்துக்கொண்டதாகவும் ,நகரத்தார் சமூகத்தின் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களுக்கு எதிராக, எதிர்ப்புகளை மீறி ஐயப்பன் தத்து எடுக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.ஐயப்பன் சட்டவிதிகளுக்கு மாறாக தத்து எடுக்கப்பட்ட நிலையில் வளர்ப்பு மகன் அந்தஸ்தில் இருந்துகொண்டு தனது பதவியை துஷ்பிரோயகம் செய்து, எம்.ஏ.எம் ராமசாமியை செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை அபகரித்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தனது உயிலை பதிவு செய்யும்போது தனது அசையும் அசையாசொத்துக்களை செட்டிநாடு அறக்கட்டளைக்கே எழுதிவைத்தார் என்றும் தன்னை முறையாக ஐயப்பன் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டதாக சுட்டிகாட்டியுள்ளார்..
எம்.ஏ.எம் ராமசாமி வாழ்ந்த காலத்தில் அவருக்கு துரோகம் செய்த ஐயப்பன்,மயிலாப்பூர் தாசில்தார் முன்பு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தபோது தானும் டாக்டர் மீனா முத்தையா உள்ளிட்டோர் சார்பகாவும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிவித்துள்ளார். எதிர்ப்பையும் மீறி அவருக்கு மயிலாப்பூர் தாசில்தார் வாரிசு சான்றிதழ் வழங்கியதாகவும் எனவே வாரிசு சான்றிதழை ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், வளர்ப்பு மகனான ஐயப்பன் சார்பில் வாரிசு சான்றிதழ் கேட்டு உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.இதற்கு எதிர்ப்பு உள்ளதா என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதில் ஏ.சி.முத்தையா மற்றும் மீனா முத்தையா சார்பில் அவர்கள் நேரில் ஆஜராகமல் அவரது வழக்கறிஞர் மூலமே எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.எதிர்ப்பு மனுவில்
தத்து எடுத்ததை எம்.ஏ.எம் ராமாமி ரத்து செய்து விட்டதாக தெரிவித்தாலும் அதற்கான ஆணவத்தை தாக்கல் செய்யவில்லை என்றும், அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக பரீசிலித்தே வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கில் இறுதி விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்தபோது, மயிலாப்பூர் தாசில்தார் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அருண் ஆஜராகி, வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு தாசில்தாருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரர் எந்த தகுதியும் இல்லை என்றும் ரத்தசொந்தமும் கிடையாது என்றும் வாதிட்டார்.இதையடுத்து ஏ.சி.முத்தையாவின் மனுவை தள்ளுபடி செய்து ,
உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
[10/14, 13:33] Sekarreporter 1: சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரிய கோரிய மனுவிற்கு தமிழக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக முருகனின் மாமியாரும், நளினியின் தாயாருமான பத்மா தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உள்ள முருகனை அவரது வழக்கறிஞர்கள் அண்மையில் சந்தித்த போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 32 நாட்களாக உண்ணாவிரதம் இருப்பதால் உடல் எடை குறைந்து பேச முடியாது நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக்கோரி வேலூர் சிறைத்துறையிடம் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழக அரசு, சிறைத்துறை டி,ஜி,பி., ஐ,ஜி., மற்றும் வேலூர் சிறைத்துறை எஸ்.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து பத்மாவின் மனுவுக்கு இரண்டு வாரங்களின் பதிலளிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.
[10/14, 13:37] Sekarreporter 1: வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும், ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற கோரி அவரது மாமியாரும், நளினியின் தாய் பத்மா மனு.

தமிழக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், 32 நாட்களாக சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்…

உடல்நிலை பாதிக்கப்பட்டு, உடல் எடை குறைந்து ஆபத்தான நிலையில் உள்ளார் – மனு…

முருகனுக்கு உரிய சிகிச்சை வழங்கி, அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் கோரிக்கை.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு
[10/14, 14:46] Sekarreporter 1: கஞ்சா விற்ற வழக்கில் இரண்டு வாலிபருக்கு தலா ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கண்ணகி நகர் வ.உ.சி., தெருவில், தினமும் கஞ்சா விற்பனை நடப்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, 2018 மே 15ல் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் தமிழ், 25 மற்றும் மணி,25 ஆகிய இருவரும், கவரில் 2.4 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி,’இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், தலா ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
[10/14, 17:24] Sekarreporter 1: தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில், மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக பணிபுரிந்துவந்த முத்துமாலைராணி என்பவர் நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மருந்து ஸ்டோர் அதிகாரியாக இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியாகி, அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் வைரஸ் நோய்கள் தொடர்ந்து பரவி வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, புதிய நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மருந்து நிறுவனங்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனவா என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[10/14, 18:23] Sekarreporter 1: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிப்பது குறித்து மறுஆய்வு செய்யலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மருத்துவப் படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.

கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி என்கிற என்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210 மதிப்பெண்ணும், 250 மதிப்பெண்ணும் எடுத்திருந்தார்.

அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால், தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழும் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் 7.5 % ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளுக்கும் வழங்கி இருந்தால் தனக்கும் மருத்துவ இடம் கிடைத்திருக்கும் என்றும், தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கும் அமல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசிடம் அளித்த மனுவை பரிசீலித்து மருத்துவ படிப்பில் தனக்கு ஒரு இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார், அரசு கூடுதல் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகி, தனியார் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களையும், இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதன்பின்னர் நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இரு நீதிபதிகள் அமர்வு நிராகரித்த நிலையில், மீண்டும் அதே நிவாரணத்தை கோர முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசுதான் நிதிஉதவி செய்கிறது என்பதாலும், அங்கு படிக்கும் மாணவர்களும் வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்களின் பொருளாதார சமூக நிலை என்பது அரசு பள்ளி மாணவர்களை போன்று தான் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு மறு ஆய்வு செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இருந்தாலும் அரசின் கொள்கை முடிவுக்கு சமத்தப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

You may also like...