nirmaladevi case cj bench

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 26ம் தேதிக்கு கீழமை நீதிமன்றத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த குற்ற வழக்கில் சாட்சி விசார்ணை முடிந்து, தீர்ப்பு ஏப்ரல் 26ம் தேதிக்கு கீழமை நீதிமன்றத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது என்பதால், ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என தெரிவிக்கும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...