ops case arguments in Mhc Judge Ananth venkadesh /11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போது மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போது மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என என, பன்னீர்செல்வம் சகோதரர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மற்றும் அவரது மனைவி சசிகலாவதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீனிவாசன் வாதங்களை முன்வைத்தார்.

அப்போது அவர், சட்டப் பிரிவுகளின் கீழ் மேல் விசாரணைக்கு உத்தரவிட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உள்ளது எனவும், வழக்கு தொடர்வதற்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை திரும்பப் பெற முடியும் எனவும் வாதிட்டார்.

விடுவிக்கக் கோரிய மனு மீது முடிவெடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் ஆதாரங்களை ஆய்வு செய்யத் தேவையில்லை எனவும், விடுவித்து பிறப்பிக்கப்படும் உத்தரவில் காரணங்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

சபாநாயகர், அரசு தலைமை வழக்கறிஞர், குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே, வழக்கு தொடர அளித்த அனுமதியை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது எனவும் வாதிட்டார்.

கடந்த 2012ம் ஆண்டு பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம், 11 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மரணமடைந்து விட்டதாகவும், பல சாட்சிகள் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்த மூத்த வழக்கறிஞர், நீண்ட காலஇடைவெளிக்குப் பின், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் சிவகங்கை நீதிமன்ற உத்தரவில் தலையிடுவதை இந்த நீதிமன்றம் தவிர்க்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை வாதங்களுக்காக, வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...