Rajendra balaji case mhc order notice to pp

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மூலம், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி என்பவர், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்காததால், ரவீந்திரன், போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செப்டம்பர் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

You may also like...