Senior adv wilson for murasoli trust argued கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த விவகாரத்தில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஆணையத்தை அறிவுறுத்துவதாக உறுதியளித்தார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தை அறிவுறுத்துவதாக மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது.

இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கோரிக்கை விடுத்தார்.

அப்போது திமுக அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இதே விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசே, இந்த சொத்து பஞ்சமி நிலமல்ல என 2019ல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சொத்தின் உரிமை குறித்து ஆணையம் விசாரிக்கலாம் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், இந்த விவகாரத்தில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஆணையத்தை அறிவுறுத்துவதாக உறுதியளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...