senthil balaji directed to appear

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அன்றையதினம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிரான இந்த வழக்கு, சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை காவல் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...