Sethu Sir Dinamalar: #உயிர்எழுத்து அப்பா தொடங்கி, எங்கள் இல்லத்தில் எல்லோருக்கும் இரட்டைப் பெயர்கள். என் பிள்ளைகளுக்கும் அப்படியே.

[6/7, 02:19] Sethu Sir Dinamalar: #உயிர்எழுத்து

அப்பா தொடங்கி, எங்கள் இல்லத்தில் எல்லோருக்கும் இரட்டைப் பெயர்கள்.
என் பிள்ளைகளுக்கும் அப்படியே.

அதிலும் என் மகளுக்கு என்னுடைய இனிசியல் மற்றும் என் மனைவியின் இனிசியல் இணைத்து பெயரிட்டோம்.

“என் பெயரை உச்சரிப்பதற்குள் வெளிநாட்டில், விமான நிலையத்தில் இருப்பவர்கள் திணறிப் போவார்கள்” என்று செல்லமாக என் மகள் கோபித்துக் கொண்டதுண்டு.

எங்களது சிறு வயதில், நாங்கள் வசித்த, மதுரை பூந்தோட்டம் இல்லத்திற்குள் புகுந்த ஒரு பாம்பை அக்கம் பக்கத்தினர் அடித்து விரட்ட, அதற்குப் பரிகாரமாக “நாகராஜன்” என்ற பெயரை துணை பெயராக சூட்டி விட்டார்கள்.

என்னுடன் பிறந்த ஐந்து பேரில், “நாக” என்ற பெயர் எனது இரண்டு சகோதரி மற்றும் எனக்கும் சூட்டப்பட்டிருகிறது.

எனது முழு பெயரான, “சேது நாகராஜன்” ஐ, இதுவரை ஒருவர் கூட முழுமையாக சொல்லி நான் கேட்டதில்லை.

ரயில்வே டிடிஇ, தபால்காரர் தவிர.

அலுவலகம், நண்பர்கள் வட்டம் எனது முதல் பெயரான “சேது” என்று அழைப்பார்கள்.

என சகோதரிகள், எனது பெற்றோர் “நாகராஜன்” என்று சொல்வார்கள்.

சேது பாதி, மீதி பாதியுமாக நாட்கள் நகர்கின்றன.

*
வாழ்வின் முதல் கனவு, பெயரிலிருந்துதான் தொடங்குகிறது.

40 வயது கடந்த பிறகு தான், பெயரில் இருக்கும் பெருமிதங்கள் புரிகின்றன.

பலரிடம், ஒரு பெயர், பல முகங்கள் பார்த்திருக்கிறேன்.
*
தன் நடுத்தர வயது வரை, அப்பா, அவரது அப்பா, அவர் பிறந்த ஊர், ஜாதி பெயர் இணைத்து எழுதி பெருமிதம் கொண்டிருக்கிறார்.

பின்னாளில் அவர் பெயருக்கு பின்னால் இருந்த ஜாதிப் பெயரை ஏனோ, அவர் குறிப்பிடுவதில்லை.

ஆனால், தனது தந்தை பெயரையும், ஊரையும், அவர் ஒரு நாளும் மறந்ததில்லை.

காலை விழிக்கும் போதும், இரவு உறங்கும் போதும், பெற்றோர் வணங்கத் தவறியதில்லை.

*

பூர்வீகம் திருநெல்வேலி பயணிக்கும்போதோ, பிறந்த மதுரை செல்லும்போதோ, எனக்கு அப்படி தோன்றுவதுத இல்லை.

ஆனால், உறவுகளோடு பொழுதுகள் செலவழிக்க நேரமில்லாத, கான்கிரீட் காடுகள் நிறைந்த சென்னையில், யார் அறிமுகமானாலும், அவரின் பெயர், அவரின் ஊர் அறிய, ஆவலாக இருக்கிறது.

பொதுவாக, 50 வயதிற்கு மேல் அறிமுகம் ஆகும், எந்த உறவுகளும் நெஞ்சில் ஒட்டுவதில்லை, நினைவில் நீடிப்பதில்லை.

ஆனால், யார் முகம் பார்த்தாலும் நெஞ்சில் அன்பு சுரக்கிறது.

*

பொருள் சேர்க்காதவர்களிடம், பொருள் சேர்த்துக் கொள்ள ஆசை இல்லாதவர்களிடம், அன்பும், கருணையும், கண்ணில் ஈரமும் வற்றி பார்த்ததில்லை.

“வம்பைவிட அன்புதான் ஆபத்தானது” என்ற எல்லையை நோக்கி, வாழ்வின் நகர்வுதான் பூரணத்துவத்தின் விளிம்பு நிலை.

“போதும் அன்பு” என்று மனம் பக்குவம் அடையும் காலமே, உயிர்கள் உதிரும் காலம்.

*
பெயரை மாற்றிக் கொள்வதற்கு, இப்போதெல்லாம், சட்டமும் சுதந்திரமும் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது.

குழந்தைகளுக்கு “அடையாள எண்” வழங்கும் ஒரு விதிமுறை இருந்திருந்தால், அவர்கள் பருவ வயது அடைந்தபின், விருப்பமான பெயரை தங்களுக்கு தாங்களே சூட்டி இருப்பார்கள் என்று நினைத்ததுண்டு.

*

முன்பெல்லாம், பெயர்கள், அந்த நிலத்தின், இனத்தின், அடையாளம் சொல்லும். இப்போதெல்லாம் பெயர்கள் சுருங்கிவிட்டன.

உலகம் ஒரே கிராமம் ஆகிவிட்டதால், எல்லா விதமான பெயர்களையும், எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது.

முன்பெல்லாம், மனைவியர், கணவர் பெயர் சொல்ல தயங்கினார்கள்.

இப்போது, செல்லமாக, கணவன் பெயரை மட்டுமே சொல்கிறார்கள்.

*

நம் ரசனையே விருப்பமாக, நம் விருப்பமே திறமையாக, நம் திறமையே தொழிலாக, அந்த தொழிலில் சிகரம் தொடும்போது, இந்த உலகம், நமக்கு புதுப்பெயர் சூட்டி மகிழ்கிறது.

இன்றைய இளைஞர்கள், ரொம்பவும் அதிர்ஷ்டக்காரர்கள். பெயர் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

“ஹலோ ப்ரோ” என்ற வார்த்தை தான் எதிர்ப்படும் எல்லோருக்கும்.

*

ஒருவரை அழைப்பதற்கு மட்டுமே அலைபேசி சேமிப்பில் இருக்கும் ஆயிரம் பெயர்களில் சில பெயரை த் தேடிக் கொண்டிருக்கும் புதுயுகத்தில், என் டேபிளில் நேர்த்தியாக, ஒரு பிளேட் இட்லி வைக்கும், உணவு சேவையாளரின், பெயரைக் கேட்டு, “நன்றி கிருஷ்ணன்” என்று சொல்லி அவர் புன்னகையை தரிசிக்கும் ஆவல் ஒவ்வொரு நாளும் ஏற்படுகிறது.

பெயர்களின் மீது ஏன் இந்த காதல் என்று புரியவில்லை.

*

ஒளிந்து கொள்வதற்கோ, பிறரை கவருவதற்கோ, எனக்கு ஒரு புது பெயர் தேவைப்படவில்லை.

சொல்வதற்கு சுருக்கமாக இருக்கிறது என்பதற்காக, எனது முதல் பெயரை மட்டுமே, முதல் அறிமுகத்தில் பயன்படுத்தி வந்தேன்.

வாழ்வின் இறுதி நாட்களில், என் தாயார், கண்களில் ஈரம் கசிய சொல்லி தீர்த்த “நாகராசன்” என்ற பெயரையே இனி பயன்படுத்த நினைத்திருக்கிறேன்.

அதுவே “உயிர் எழுத்து” ஆகும்.

உயிரே மாயம்…
பெயரும் மாயம்… நம்
செயல்கள் மட்டுமே நிஜம்.
பெயரைவிட, செயலால் வாழ்வோம்.

#நாகராஜன்
[6/7, 03:42] sekarreporter1: 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐

You may also like...