today madras high court news

[9/2, 11:59] sekarreporter1: மகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாக புகாரளிக்காதது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற பெண் டிஜிபி திலகவதியின் முன்னாள் மருமகளுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பெண் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் மற்றும் ஷ்ருதி என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, இருவரும் தனித்தனியாக வாழும் நிலையில், இரு குழந்தைகளும் தந்தையான பிரபு திலக்கின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, தாய் ஷ்ருதி வீட்டில் இருந்து தனது ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரச் சென்ற தனது மகளை, ஷ்ருதி திட்டியதாகவும், ஷ்ருதியின் சகோதரர் விஜய் ஆனந்த், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், பிரபு திலக், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் தாங்கள் கைது செய்யப்படக் கூடும் என தெரிவித்து, முன் ஜாமீன் கோரி ஷ்ருதியும், அவரது சகோதரர் விஜய் ஆனந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன், மகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்காத ஷ்ருதி மீதான போக்சோ குற்றச்சாட்டுக்களுக்கு அதிகபட்சம் 6 ஆறு மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் எனக் கூறி, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோவில், புகாரில் குறிப்பிட்டுள்ளபடி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என விஜய் ஆனந்த் தரப்பில் கூறப்பட்டாலும், அதுகுறித்து தற்போதைய நிலையில் எந்த ஆய்வும் மேற்கொள்ள முடியாது எனக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[9/2, 13:59] sekarreporter1: நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பு நிறுவனமான ஷ்வேத் நிறுவனம் சார்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் படத்தை தயாரிக்க, சினிமா பைனான்சியர் ராம் பிரசாத்திடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. இதுசம்பந்தமாக 2021ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

30 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்திய ஷ்வேத் நிறுவனம், மீதமுள்ள 70 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்கவில்லை; பட பணிகளையும் துவக்கவில்லை.

இதற்கிடையில், இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் விஜயின் பட வேலைகளுக்கு ஆயத்தமானார். இதனால் ராம் பிரசாத், கடனை திருப்பிக் கேட்ட போது, ஷ்வேத் நிறுவனத்தின் கடனை ஏற்றுக் கொள்வதாக லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், முத்தரப்பு ஒப்பந்தம் செய்தது.

அதன்படி, காதல் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற படத்தை வெளியிடும் முன் கடன் பாக்கி திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடன் பாக்கியை திருப்பித் தராத நிலையில், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை படம் வெளியிடுவது குறித்த அறிவிப்பை லிப்ரா நிறுவனம் வெளியிட்டது.

இதையடுத்து, அந்த படத்துக்கு தடை கோரி ராம் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்த போது மனுதாரர் ராம் பிரசாத் தரப்பில் வழக்கறிஞர் ஸ்வர்ணம் ஜெ. ராஜபோபாலன் ஆஜராகி, படத்தை வெளியிடுவதற்கு முன்பாக கடனை அடைப்பதாக கூறிய உத்தரவாத்ததை மீறியதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

பின்னர் நீதிபதி அப்துல் குத்தூஸ் பிறப்பித்த உத்தரவில், 70 லட்சம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகே காதல் கண்டிஷன்ஸ் அப்ளை படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ராம் பிரசாத் மனுவுக்கு செப்டம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க ஷ்வேத் மற்றும் லிப்ரா நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.
[9/2, 14:19] sekarreporter1: இறுதி விசாரணையின் போது வாதங்களை துவங்க அவகாசம் கேட்டதற்காக அரசுத்தரப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை மாற்றியமைத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வித் துறையில் பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் கடந்த மாதம் இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பில் வாதங்களை தொடங்குவதற்கு அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்கை தள்ளிவைப்பதற்கு கோரிக்கை விடுத்ததற்காக அரசு தரப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் கடைசி நேரத்தில் விசாரணையை தள்ளிவைக்க கோரக் கூடாது என அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு, அரசு பிளீடர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, அபராதம் செலுத்த வேண்டாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
[9/2, 16:02] sekarreporter1: தாயின் அரவணைப்பில் இந்தியாவில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை, அமெரிக்காவில் இருக்கும் தந்தையின் கட்டுப்பாட்டில் அனுப்ப அனுமதித்தால், குழந்தைகளை வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காதலித்து இரு வீட்டார் ஏற்பாட்டுடன் மணமுடித்து அமெரிக்காவில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு, 12 வயது பெண் குழந்தையும், 2 வயது ஆண் குழந்தையும் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இருவருக்குமான உறவு எங்கே தொலைந்தது என்பதை புரிந்துகொள்வதற்காக ஓராண்டு காலத்திற்கு இருவரும் பிரிந்திருக்கும்படி, மனைவியின் சகோதர் அளித்த ஆலோசனையை ஏற்று இருவரும் பிரிந்த நிலையில், குழந்தைகளுடன் மனைவி சென்னையில் வசித்துவருகிறார்.

இந்நிலையில், மனைவியிடம் உள்ள தன் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கணவர் தரப்பில கல்வி, வாழ்வு, சமுதாயம் ஆகியவற்றில் முன்னேற்றம் காணும் வகையில், குழந்தைகளை அமெரிக்கா அழைத்துச்செல்ல இருப்பதால், இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், கைக்குழந்தையாக உள்ள மகனை அனுப்பாவிட்டாலும், பள்ளி படிப்பில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், சிறப்பான கல்வியை அளிப்பதற்காக மகளை மட்டுமாவது அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மனைவி தரப்பில், அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது வந்து குழந்தைகளை சந்தித்து, தன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுவந்து கொண்டிருப்பதாகவுன், அதற்கு தனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மகளை சென்னையிலேயே சர்வதேச பள்ளி ஒன்றில் சேர்த்து, கலை, விளையாட்டு ஆகியவற்றிலும் பயிற்சி பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இரு குழந்தைகளையும் கணவனுடன் அனுப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணையின்போது, இரு குழந்தைகளையும் அழைத்து நீதிபதி மஞ்சுளா அவர்களிடம் பேசினார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், சிறுமி போதுமான விவரம் அறிந்தவராகவும், 2 வயது குழந்தை எப்போது அக்காவின் பிணைப்பிலேயே, சுட்டிப்பையனாகவும் இருப்பதாக நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தங்களது எதிர்காலத்தின் மீது தாய், தந்தை இருவரும் அக்கறை கொண்டுள்ளதை 12 வயது சிறுமி உணர்ந்திருப்பதும், தந்தை மீது பாசமாக இருப்பதும் நன்றாக வெளிப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளியில் அனைவரும் அக்கறையுடன் கவனித்து கொள்வதாகவும், பள்ளி இறுதி படிப்பை தற்போதைய பள்ளியிலேயே முடிக்க விரும்புவதாகவும், உயர் கல்விக்கு வேண்டுமானல் அமெரிக்கா செல்ல விருப்பப்படுவதாக சிறுமி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான உணர்வுப்பூர்வமான மற்றும் நிதி ரீதியிலான பங்களிப்பை கணவர் வழங்குவதில் மனைவிக்கு ஆட்சேபனை இல்லை என்பதால், அன்பான அப்பாவாக இருந்து குழந்தைகளை ஆதரிப்பது குறித்து அவரே முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு கணவருடையது என குறிப்பிட்டுள்ளார்.

தாயின் அரவணைப்பில் இந்தியாவில் சந்தோசமாக இருக்கும் மைனர் குழந்தைகளை, அமெரிக்காவில் இருக்கும் தந்தையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதித்தால், அவர்களது வாழ்வில் சமநிலையின்மையை உருவாக்கும் என்பதால், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய தந்தையின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்
[9/2, 16:26] sekarreporter1: புழல் சிறையில் தாக்கப்பட்டதால் காயமடைந்ததாக கூறப்படும் நைஜீரியா நாட்டை சேர்ந்த மூன்று கைதிகளை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நைஜீரியா நாட்டை சேர்ந்த அகஸ்ட்டீன், எட்வின் மற்றும் இம்மானுவேல் ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களது தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு கடந்த 30ம் தேதி புழல் சிறையில் அகஸ்ட்டீனை சந்தித்திருக்கிறார். அப்போது, சிறை வார்டன்கள் தங்கள் மூன்று பேரையும் தாக்கியதாகவும், தங்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் சங்கரசுப்புவிடம் அகஸ்ட்டீன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, கடந்த 21ம் தேதி சோதனை நடத்திய போது அகஸ்ட்டீன் உள்ளிட்ட மூவரிடம் இருந்து செல்ஃபோன் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

இதனையடுத்து, மூவரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு வழக்கறிஞர்களை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கைதிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படும் துணை வார்டன் சாந்தகுமார் உடல்நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அறிக்கையின் அடிப்படையில் மூவருக்கும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
[9/2, 17:10] sekarreporter1: 2007ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய அரசுக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சுகாதார துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்தேதியிட்டு பணி நிரந்தரம் வழங்கி, பணிமூப்பு பட்டியலை திருத்தி அமைத்து பதவி உயர்வு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2007ஆம் ஆண்டு அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ள போதும், அதை அமல்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளர், மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தபடும் என்றும் அது சம்மந்தமான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து 2015ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, எட்டு ஆண்டுகளுக்கு மேல் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அரசுக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், 2007 உத்தரவை அமல்படுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
[9/2, 17:45] sekarreporter1: சாலை விபத்தில் நுரையீரலில் ரத்தக் கட்டு ஏற்பட்டு உயிரிழந்த கனரக வாகன ஓட்டுனரின் குடும்பத்தினருக்கு 23 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கனரக வாகன ஓட்டுனர் முருகேசன் என்பவர் மீது எதிரில் வந்த கார் மோதியது. கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகேசன், கோவை முத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

விபத்தில் காயமடைந்த அவர், இழப்பீடு கோரி ஈரோட்டில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முருகேசன் மரணமடைந்தார்.

பின் அவரது மனைவி, தாய், குழந்தைகள் இந்த வழக்கை நடத்தி வந்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், முருகேசன் குடும்பத்தினருக்கு 23 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து யுனைட்டெட் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வு விசாரித்தது.

விபத்தில், நுரையீரலில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக முருகேசன் இறந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சாட்சியம் அளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த சாட்சியத்தை நிராகரிக்கும் வகையில் காப்பீட்டு நிறுவனம் தீர்ப்பாயத்தின் முன் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்பதால், தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

[9/2, 21:04] t: பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கை பண மோசடிக்கு பயன்படுத்திய வழக்கில், கணக்கு வைத்திருப்பவர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராம்சரண் நிறுவனத்தின் பங்குதாரரான கவுசிக் பலிச்சா என்பவரின் பயன்பாட்டில் இல்லாத கணக்கில் போலி காசோலை மூலம் 9 கோடியே 99 லட்ச ரூபாயை சிலர் டெபாசிட் செய்ய முயற்சித்ததாக பதிவான வழக்கில் 10வது குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டார்.

தன் மீதான் வழக்கை ரத்து செய்யக் கோர கௌசிக் பலிச்சா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த விவகாரத்தில் கணக்கை வைத்திருப்பவர் சாட்சியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, குற்றம்சாட்டப்பட்டவராக வைக்க முடியாது என கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஒன்பது பேர் மீதான வழக்கை தொடரவும், விரைவில் விசாரணையை முடிக்கவும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
[9/2, 21:07] M Madras High Court quashes case against holder of a dormant bank account that was target of fraud

Justice N. Anand Venkatesh said the account-holder in this case, in whose dormant account a group of persons had attempted to deposit ₹9.99 crore, could, at best, be a witness and not an accused person

The Madras High Court has quashed a criminal case registered against the holder of a dormant bank account, which was targeted by a group of people to deposit ₹9.99 crore by way of a forged cheque. The court held that the account-holder could, at best, be a witness, and not an accused person in the case.

Justice N. Anand Venkatesh quashed the case with respect to the tenth accused person in the case, Kaushik Palicha, partner of Ramcharan Company, alone. He directed the second Metropolitan Magistrate at Egmore in Chennai to proceed against the other nine accused persons in the case, and complete the trial as early as possible.
[9/2, 21:17]  நாமக்கல் பள்ளி மாணவர் தற்கொலைக்கு தொடர்பான வழக்கை முடித்து காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்த நாமக்கல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த 11ம் வகுப்பு மாணவர் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சக மாணவர்கள் தகாத முறையில் பேசியதாலும், தாளாளர் மற்ற மாணவர்கள் முன் அடித்ததாலும், மோகன் ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாமக்கல் சிபிசிஐடி போலீசார், விசாரணைக்கு பின், தற்கொலை எனக் கூறி, வழக்கை முடித்து வைக்க கூறி, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கையை நிராகரித்த நாமக்கல் நீதிமன்றம், வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு தாளாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி தாளாளர் தங்கவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி M.நிர்மல் குமார் பிறப்பித்த உத்தரவில், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவனை கவனிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை என்றும், சக மாணவர்கள் பிரச்னை செய்வது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் அதை தீவிரமாக கருதவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வழக்கை விசாரித்த போலீசாரும் மிக சாதாரணமாக இந்த வழக்கை கையாண்டுள்ளதாகவும், அத்தனை ஆதாரங்களையும் ஆராய்ந்து, நாமக்கல் நீதிமன்றம் வழக்கை கோப்புக்கு எடுத்துள்ளதால், இதில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[9/2, 21:26t:

 

வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தியவிற்கு சொந்தமான பொருட்களை மீட்க சிறப்புக் குழு அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சோழர், பல்லவர் காலத்து புராதான சின்னங்கள், பழங்கால கோயில் சிலைகள், அரிய பூஜை பொருட்கள் ஆகியவை வெளிநாட்டினரால் அபகரிக்கப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் ஏசியன் ஆர்ட் மியூசியத்திலும், சிகாகோ ஆர்ட் மையத்திலும் இருப்பதாகவும், ராஜராஜசோழன் காலத்தில் ஆனைமங்கலம் கிராமத்திலிருந்த தாமிர தகடுகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தாமிரத்திலான பெரிய அளவிலான 21 தகடுகளில் 5ல் சமஸ்கிருதத்திலும், 16ல் தமிழிலும் எழுதப்பட்டுள்ளதாகவும், சிறிய அளவிலான 3 தாமிர தகடுகளும் இருப்பதை லேடன் பல்கலைக்கழகமும் உறுதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சோழர் கால தாமிர தகடுகளில், கிராமங்களின் வரைபடங்கள், வரி வசூல் முறைகள், பாசன திட்டங்கள், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன என்றும், நாகப்பட்டினத்தில் சோழர்கள் ஆட்சி காலத்தில் புத்த பிக்குகளின் மத்தியில் எப்படி ஆன்மீகம் பரவியது என்பதும் தாமிர தகடுகளில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு சொந்தமானவற்றை மீட்பதற்கான சிறப்பு குழுவை அமைத்து, மீட்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும், தொல்பொருள் ஆய்வு இயக்குநரகத்திற்கும் கடந்த 2018 செப்டம்பரில் கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை என்பதல, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் R.மகாதேவன், P.D.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, தாமிர தகடுகளை கேட்டு நெதர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரர் அனுப்பிய கடித்தத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

 

 

You may also like...