அதிமுக-வின் பெயர், கொடி உள்ளிட்டவற்ற பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லையாம் ஒ.பன்னீர்செல்வம் வக்கீல்

அதிமுக-வின் பெயர், கொடி உள்ளிட்டவற்ற பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கம் அளித்த நிலையில், அவருக்கு எதிராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை ஜனவரி மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஒபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் மீண்டும் விசாரணக்கு வந்தபோது, அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கெளதம்குமார், பன்னீர் செல்வத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கு, பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு இன்னும் வராததால், வழக்கை தள்ளிவைக்க வேண்டும் எனவும், தற்போது வரை தனி நீதிபதியின் இடைக்கால தடை உத்தரவை மீறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையேற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...