அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டம் smsj பரபரப்பு உத்தரவு aag raman lal

அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோயம்பேட்டை ஒட்டி இருக்கும் அமைந்தகரை தாலுகா, பூந்தமல்லி சாலையில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்துக்கு சதுர அடி 13 ஆயிரத்து 500 ரூபாய் என குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.

இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி திருத்திய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஷ்யம் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும் அரசு நிலத்தை முழுமையாக மீட்டு, வேலி அமைத்து, பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், அதிக மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரிக்க உடந்தையாக செயல்பட்ட அரசு ஊழியர்கள், பொது ஊழியர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், அரசு நிலத்தை அபகரிக்கும் திட்டமிட்ட ஊழல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அபகரிக்கப்பட்ட அரசு நிலங்களை அடையாளம் காணவும், அரசு நிலங்கள் சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்தது குறித்தும், குத்தகை பாக்கியை வசூலிப்பது குறித்தும் ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அமைக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...