உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கோவை வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

காணொலிக் காட்சி மூலம் ஆஜராவதால் தொழில்ரீதியாக பாதிப்பு: உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கோவை வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

சென்னை: வழக்கு விசாரணைக்காக காணொலிக் காட்சி மூலம் ஆஜராவதால் தொழில் ரீதியாக வழக்கறிஞர்கள் சிரமத்துக்குள்ளாவதாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கோவை வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், நீதிமன்றங்களில் மீண்டும் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (சிபிஏ) தலைவர் பி.ஆர்.அருள்மொழி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

”சிபிஏ செயற்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், காணொலிக் காட்சி மூலம் வழக்குகளில் ஆஜராவதால் தொழில்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். காணொலிக் காட்சி மூலம் ஆஜராவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை பெரும்பாலான வழக்கறிஞர்களால் பின்பற்ற முடிவதில்லை. எனவே, மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் நடைபெறும் ஜாமீன் மனு விசாரணைக்காக நேரடியாகவும், காணொலிக் காட்சி மூலமும் ஆஜராக கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டும்.

அதேபோல, ஜாமீன் மனு விசாரணைக்காக ஆஜாராகும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும் நேரிலும், காணொலிக் காட்சி வாயிலாகவும் ஆஜராக அனுமதிக்க வேண்டும். ஜாமீன் மனுக்களைக் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் குறைந்தபட்சம் தலா 10 பழைய வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதை சிறப்புப் பட்டியலிட்டு, அவற்றை முன்கூட்டியே வழக்கறிஞர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்த வழக்குகளில் வழக்காடிகளையும், வழக்கறிஞர்களையும் விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும்.

ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருதரப்பு வழக்கறிஞர்களும் கூட்டாக மனு செய்யும்போது, குறிப்பிட்ட தேதியில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்களின் நலனையும், தொடர்ந்து அவர்கள் வழக்குகளை நடத்த வேண்டும் என்பதையும் கருத்தில்கொண்டு, இந்தக் கோரிக்கைகள் குறித்து தாங்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...