எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர் case

T

எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் இயக்குனர் ஷங்கர் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், ஜூகிபா என்ற தலைப்பில் தான் எழுதிய நாவலை ஷங்கர் திருடியுள்ளதாக, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவான குற்ற வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், எந்திரன் படத்தின் கதைக்காக இயக்குனர் ஷங்கரிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது.

இதன் அடிப்படையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குனர் ஷங்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி ஆரூர் தமிழ்நாடனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...