ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுதலாமே chief bench கருத்து ask to file reply

ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வி தாள்களை அந்தந்த மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது என மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஐ ஏ.எஸ். – ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் உட்பட மத்திய அரசு பணியாளர் நடத்தும் அனைத்து தேர்வுகளும் விதிகளின் படியே நடத்தப்படுகிறது. இந்த வழக்கில், தேர்வாணையத்தின் கருத்துகள் இன்னும் கிடைக்க பெறாததால், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவேண்டும் என கோரப்பட்டது.

இதையடுத்து, சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த முடிவெடுக்கபட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, அனைத்து மொழிகளிலும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத அனுமதித்துள்ள நிலையில், கேள்வி தாள்களை அந்த அந்த மொழிகளில் வழங்கலாமே என கேள்வி எழுப்பி, வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

You may also like...