கோவில் உண்டியல். Case Hrnc filed counter cj bench

விதிகளின்படி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவதாகவும், உண்டியல் திறப்பை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் இல்லாமலும், விதிகளை பின்பற்றாமலும் உண்டியல்களை திறக்க கூடாது என உத்தரவிடக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதேபோல, உண்டியல் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க கோரியும், உண்டியல்களை திறந்து காணிக்கையை எண்ணும் போது கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்; காணிக்கை எண்ணும் பணிக்கு உள்ளூர் மக்களையே பணியமர்த்த வேண்டும் எனக் கோரியும், உண்டியல எண்ணிக்கையை கண்காணிக்க மாவட்டம் தோறும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அல்லது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் வழக்குகள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்து, அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன் தாக்கல் செய்த பதில் மனுவில், 5000 ரூபாய்க்கு மேல் வசூலாகும் கோவில் உண்டியல்களை மாதந்தோறும் திறக்க வேண்டும், இரு வாரங்களுக்கு முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளின்படி, கோவில் அறங்காவலர் குழு தலைவர், செயல் அலுவலர், தக்கார்கள், பொது மக்கள், வங்கி அதிகாரிகள் முன் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிலுள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய கோவில்களில் உண்டியல் திறப்பு மற்றும் எண்ணிக்கை கோவில் யூ டியூபில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய கோவில்களில் உண்டியல் திறப்பின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவதால், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2024 ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...