தலைமை நீதிபதி கங்கபூர்வலா, நீதிபதி ஆதிகேசவலு sand case order notice

திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தில் உள்ள ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மண் அள்ளப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா கோளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆனந்தன், சரவணன் உள்ளிட்டோர் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், தங்கள் ஊரில் உள்ள 185 ஏக்கர் பரப்பளவில் பரவிய பெரிய எரியை நம்பி 730 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏரியில் 50 நாட்களுக்கு மட்டும் மண் அள்ள கடந்த ஏப்ரல் 21தேதி மாவட்ட ஆட்சியர் பல்வேறு நிபந்தனையுடன் அனுமதி அளித்த நிலையில், மூன்று அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்ற நிபந்தனைதை மீறி, ஒப்பந்ததாரர் பரத் என்பவர் ஐந்து அடிக்கு மேல் மண் அள்ளுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து விளைநிலம் பாதிப்படுவதாலும் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், மண் அள்ள அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வலா, நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து செப்டம்பர் 4 தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தனர்.

You may also like...