தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் தாக்கல் செய்த கூடுதல் பதில்மனுவில், 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டுமானால் அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும்

உள்கட்டமைப்பு வசதிகள், செலவு உள்ளிட்ட காரணங்களால், நூறு சதவீதம் தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என தமிழ்நாடு போக்குவரத்து துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது.

அதன்படி பேருந்துகள் கொள்முதல் செய்யும் போது, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கொள்முதல் செய்யப்படும் நூறு சதவீத பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனர் தாக்கல் செய்த கூடுதல் பதில்மனுவில், 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டுமானால் அதற்குரிய வகையில் பேருந்து நிறுத்தங்களை மேம்படுத்த வேண்டும் என்றும், மழை காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் பேருந்துக்குள் புகுந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தாழ்தள பேருந்தின் விலை 80 லட்சம் ரூபாய் எனவும், அதனை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்க 41 ரூபாய் செலவாகும் எனவும், சாதாரண பேருந்துகளுக்கு பாதி செலவே ஆகின்றன என்றும் கூடுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்தள பேருந்துகள் பராமரிப்புக்கு தனி வசதிகள் தேவைப்படுவதாகவும், இந்த காரணங்களால், 100சதவீதம் தாழ்தள பேருந்துகளை இயக்கவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பேருந்துகளின் பின்புறம் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் சாய்தளம் பாதை அமைக்க முடியுமா என்பது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து பொறியாளர்காளிடம் கலந்து பேசி தெரிவிக்கும்படி அரசு தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...