தாயை பராமரிக்காத மகள் சொத்து அம்பேல் சரியே mhc order

தாயை பராமரிக்காத மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தின் பத்திர பதிவை ரத்து செய்த வருவாய் அலுவலரின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரூப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜம்மாள் என்பவர் தமக்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலத்தை கடந்த 2016ம் ஆண்டு தனது மகளான சுகுனாவிற்கு எழுதி வைத்தார்.

உறுதியளித்தப்படி , மகள் தம்மை கவனிக்காததால், பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி ராஜம்மாள் உடுமலைப்பேட்டை தாலுகா வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட வருவாய் அலுவலர் அந்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சுகுணா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, தாயை பராமரிப்பதாக கூறியதாலேயே சுகுணாவிற்கு சொத்து எழுதி வைக்கப்பட்ட நிலையில் அந்த நிபந்தனையை அவர் மீறியதால் சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டதாக வருவாய் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உரிய விசாரணைக்கு பின்னர் சட்டப்படியே சொத்து பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வருவாய் அலுவலரின் உத்தரவில் தலையிட தேவையில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...