திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார்.

திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார்.

திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், அண்ணாமலை இரண்டாவது முறையாக ஆஜராகி இருந்த நிலையில், அவரிடம் டி.ஆர்.பாலுவின் வழக்கு குறித்து நீதிபதி அனிதா ஆனந்த் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் குறித்த தனது கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், தன் மீதும் எந்த தவறும் இல்லை என்றும் கூறி, பாலு கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இதையடுத்து, அவதூறு வழக்கில் விசாரணையை தொடங்குவதற்காக, வழக்கை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினமும் அண்ணாமலை ஆஜராக உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டதாகவும், டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக டி.ஆர்.பாலு தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜரானார்கள்.

You may also like...