தொழில்நுட்ப தவறுகளுக்காக ஹால் டிக்கட் மறுக்க கூடாது தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள் தேர்வுக்கு. Rmdj

தொழில்நுட்ப தவறுகளுக்காக ஹால் டிக்கட் மறுக்க கூடாது
தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள் தேர்வுக்கு

சென்னை, மே 7: உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு அவர்களின் விண்ணப்பத்தில் உள்ள தொழில்நுட்ப தவறுகளை சுட்டிக்காட்டி அனுமதி சீட்டை தராமல் இருக்க கூடாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் உடனடியாக ஹால் டிக்கெட்டுகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் போலீஸ் தரப்பில் ஆஜராகும் உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்திற்கான தேர்வு தொடர்பான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் வெளியிட்டது.

இதையடுத்து, இதற்கான முதல் நிலை எழுத்து தேர்வு முடிந்த நிலையில் இன்றும் நாளையும் மெயின் தேர்வு நடைபெறவுள்ளது. ஆனால், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பலருக்கு மெயின் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வரவில்லை. விண்ணப்பத்தில் அனுப சான்று, தந்தையின் சாதி சான்று உள்ளிட்ட விபரங்களை தரவில்லை என்ற காரணங்களால் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வழங்க கோரி சி.ராஜ்குமார், எம்.தனலட்சுமி உள்ளிட்ட 21 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தந்தையின் சாதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், கணவரின் சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது பதிவிடவில்லை என்பது தொழில் நுட்ப காரணமாகும். எந்த ஆவணங்கள் தரப்படவில்லை என்பதை தேர்வில் பங்கேற்கும் சம்மந்தப்பட்ட நபர்களிடம் பெற முடியும். மனுதாரர்கள் அனைவரும் முதல்நிலை தேர்வி வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இதுபோன்ற தொழில் நுட்ப தவறுகளை சுட்டிக்காட்டி ஹால் டிக்கெட் வழங்காமல் இருக்க கூடாது.

மெயின் தேர்வு மே 7 மற்றும் 8ம் தேதிகளில் நடக்கவுள்ளதால் மனுதாரர்களின் ஹால் டிக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மே 6ம் தேதி இரவு 7 மணிக்குள் (நேற்று) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மனுதாரர்களின் தேர்வு முடிவுகள் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்திவைக்கப்பட வேண்டும்.

மெயின் தேர்வு முடிந்த ஒருவாரத்திற்குள் மனுதாரர்கள் அரசு பணிகள் தேர்வாணையத்தை நேரில் அணுகி தேவையான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்களின் ஆய்வுதொடர்பான அறிக்கையை தேர்வாணையம் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

You may also like...