நாகூர் தர்கா நிர்வாகத்தை கவனிக்க நான்கு மாதங்களுக்கு என குறுகிய காலத்துக்கு நியமிக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளாக தொடர்வது ஏன் என விளக்கமளிக்க தற்காலிக நிர்வாக குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகூர் தர்கா நிர்வாகத்தை கவனிக்க நான்கு மாதங்களுக்கு என குறுகிய காலத்துக்கு நியமிக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளாக தொடர்வது ஏன் என விளக்கமளிக்க தற்காலிக நிர்வாக குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகூர் தர்கா நிர்வாக முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தர்கா நிர்வாகத்தை கவனிக்க நான்கு மாத காலத்துக்கு என்ற அடிப்படையில், ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் அடங்கிய தற்காலிக நிர்வாக குழுவை நியமித்து 2017ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், தர்காவின் 465வது உர்ஸ் விழாவில் பங்கேற்க முஹாலி முத்தவல்லி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தர்காவின் தற்காலிக நிர்வாக குழு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வக்பு வாரியம் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும், இந்த தகவலை தற்காலிக நிர்வாக குழுவுக்கு அப்போதே தெரிவித்த போதிலும், தர்காவின் நிதியை தவறாக பயன்படுத்தி இந்த மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு என நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு, இன்னும் தொடர்வது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழுவை கலைப்பது குறித்து மார்ச் 10ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படியும் உத்தரவிட்டனர். அதுவரை தர்கா விவகாரங்களை மேற்கொள்ள கூடாது என தற்காலிக நிர்வாக குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தர்காவுக்காகவும், தற்காலிக நிர்வாக குழுவுக்காகவும் மேற்கொண்ட செலவு விவரங்களை தாக்கல் செய்ய குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தற்காலிக குழு செய்த செலவு விவரங்களை தாக்கல் செய்ய வக்பு வாரியத்துக்கும் உத்தரவிட்டனர்.

மேல் முறையீட்டு வழக்கு செல்லாததாகி விட்டதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தற்காலிக நிர்வாக குழுவுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை மார்ச் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...