நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணையில் உள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியம் அளித்ததால், அவரை வரவழைத்து விசாரித்த நீதிபதிகள், அவர் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். For Appellants Sr Adv A Ramesh For Gokulraj Mother Adv Lajpathi Roy For State Adv ப. பா. மோகன்.

ஆணவக் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜுடன் , குற்றம்சட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதன் பிறகு நடந்த நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அதேபோல வழக்கில் சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணையில் உள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியம் அளித்ததால், அவரை வரவழைத்து விசாரித்த நீதிபதிகள், அவர் மீது தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகளும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, கோகுல்ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல்ராஜை யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் அழைத்து சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார்.

கோகுல் ராஜும், சுவாதியும் பேசிக்கொண்டிருந்த போது தான் சென்று விசாரணை நடத்தியதை தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், கோகுல்ராஜிடமிருந்து சுவாதியை பிரித்து அழைத்து செல்வதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும், கோகுல்ராஜின் தற்கொலை வீடியோ என சொல்லப்படும் காணொலி குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போனில்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

அதேபோல் இந்த வழக்கில் 5 பேரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், கோகுல்ராஜுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தொடர்பான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உணர்வுகள் அடிப்படையில் அல்ல எனவும் தெளிவுபடுத்தினர்.

இதைத்தொடர்ந்து, இது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக கோகுல்ராஜின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் நாளை தள்ளி வைக்கப்பட்டது.

You may also like...