Sethil balaji case adj

ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத பாஜக நிர்வாகி நிர்மல்குமார், 5 முறை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை பார்த்து மக்கள் தலைவரா என கேட்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு தடை விதிக்ககோரி அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில்பாலாஜி குறித்து அவதூறாக பேச நிர்மல்குமாருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று தொடங்கியபோது, செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மற்றொரு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, நிர்மல்குமாரின் கருத்துகள் நியாயமானதாகவோ, தரமானதாகவோ இல்லை எனவும், சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கி தன்னுடைய மனதில் வரும் கருத்துகளை பதிவிட்டு வருவது சட்டத்தின் ஆட்சியை பின்பற்றும் சமுதாயம் அனுமதிக்காது என வாதிட்டார்.

செந்தில் பாலாஜியை மக்களின் தலைவரா என கேள்வி எழுப்பும், நிர்மல் குமார் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை எனவும், 5 முறை தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சரின் சகோதரர் கமிசன் வாங்கியதாக கூறிய நிர்மல்குமார், அதற்கான ஆதராங்களை வெளியிடவில்லை எனவும், நீதிமன்றம் தடை விதித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனவே நிர்மல்குமார் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

You may also like...