நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மனுதாரர் தியாகராஜன் பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்பை

    சென்னை, ஜூலை 17: பணி நீக்க காலத்தில் தரப்பட வேண்டிய பணப்பலன்களை வழக்கறிஞர்களின் நலனுக்காக தருவதாக கூறிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

    அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சிஐஎஸ்எப்) சேர்ந்தவர் ஆர்.தியாகராஜன். இவர் கடந்த 1999ல் சென்னையில் சிஐஎஸ்எப்பில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு இடங்களில் பணியாற்றினார். கடந்த 2011ல் துறை ரீதியான தேர்வு எழுதி சிஐஎஸ்எப்பில் சப்-இன்ஸ்பெக்ராக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் 2012 இவர் சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த பணி நீக்க உத்தரவை எதிர்த்து தியாகராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தியாகராஜனை மீண்டும் பணியில் சேர்க்குமாறு சிஐஎஸ்எப்புக்கு உத்தரவிட்டது.
    இந்த உத்தரவை எதிர்த்து சிஐஎஸ்எப் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

    இதையடுத்து, தியாகராஜனை 2018ல் மீண்டும் பணியில் சேர்த்த சிஐஎஸ்எப் வழக்கு காலத்தில் அவருக்கு பணப்பலன்களை வழங்க மறுத்துவிட்டது.
    இதை எதிர்த்தும் தனக்கு பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரியும் தியாகராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், மனுதாரர் தியாகராஜன் பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு பார்கவுன்சிலில் கடந்த 2016ல் வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலும் செய்து வருகிறார்.
    நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2018ல் அவர் மீண்டும் சிஐஎஸ்எப் பணியில் சேர்க்கப்பட்டார். அதனால், அவருக்கு அவர் பணி நீக்கம் செய்யப்பட்ட 2012ம் ஆண்டு முதல் 2018 மார்ச் வரையிலான பணப்பலன்களை தரவேண்டும் என்று வாதிட்டார்.

    சிஐஎஸ்எப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, தனி நீதிபதியின் உத்தரவைத்தான் டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்தது. அதில் மனுதாரரின் பணப்பலன்கள் தொடர்பான கோரிக்கை குறித்து எதுவும் கூறவில்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
    மனுவை விசாரித்த நீதிபதி, \” மனுதாரர் தனது பணி நீக்க காலத்தில் சட்டம் படித்து வழக்கறிஞராகியுள்ளார். அவர் 2016 டிசம்பரில் பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை செய்துள்ளார். எனவே, 2016 டிசம்பர் முதல் 2018 மார்ச் வரையிலான காலக்கட்டத்திற்கு பணப்பலன்களை அவர் கோர முடியாது. அதேநேரம் அவர் வழக்கறிஞராக தொழில் செய்யாத காலத்திற்கான பணப்பலன்களை அவருக்கு தரவேண்டும்.

    வழக்கு விசாரணையின்போது மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனக்கு வரவேண்டிய பணப்பலன்களை தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே தனக்கு போதுமானது. எனவே, அந்த பணப்பலன்களை வழக்கறிஞர்களின் நலனுக்காக தர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    உன்னதமாக வழக்கறிஞர் தொழிலில் மனுதாரர் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். எனவே, அவரின் பெருந்தன்மையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவருக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை அவரின் விருப்பத்திற்கு ஏற்ப இளம் வழக்கறிஞர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள வழக்கறிஞர்களின் நலனுக்காக தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு தருமாறு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
    மனுதாரருக்கு உரிய பணப்பலன்களை 6 சதவீத வட்டியுடன் 6 வாரங்களுக்குள் சிஐஎஸ்எப் தரவேண்டும். அந்த தொகையை தமிழ்நாடு பார்கவுன்சில் மனுதாரரின் விருப்பத்தின்படி இளம் வழக்கறிஞர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள வழக்கறிஞர்களின் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும்\” என்று உத்தரவிட்டார்.

You may also like...