நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவை பெறும் நோக்கில், மாணவிகளின் வருகை பதிவில் திருத்தம் செய்த தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவை பெறும் நோக்கில், மாணவிகளின் வருகை பதிவில் திருத்தம் செய்த தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, குன்றத்தூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், (மாதா கல்லூரி) கடந்த 2013 – 14 ம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற மாணவியிடம் அரசு நிர்ணயித்த கட்டணமான 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், கூடுதலாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலுத்தக் கூறியதுடன், கட்டணம் செலுத்தாததால், பயிற்சி பெற விடாமல் தடுத்ததாகக் கூறி, படிப்பு முடித்த சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி மாணவி வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவியிடம், 14 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்த நிலையில், கூடுதலாக 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்ததுடன், சான்றிதழ் வழங்க மறுத்ததாக கூறி மாணவி ரம்யா பிரியா என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த இரு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்குகளில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார். பல்கலைக்கழக குழு அளித்த அறிக்கையில், இரு மாணவிகளிடமும் கூடுதலாக கட்டணம் வசூலித்ததது தெரியவந்ததாக கூறிய நீதிபதி, மாணவிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் மாணவிகளுக்கு எதிராகவும், தங்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பை பெறுவதற்காக, இருவரின் வருகைப் பதிவை திருத்தி, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மருத்துவக் கல்லூரிக்கு 3 கோடிரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை எட்டு வாரங்களில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டும் எனவும், அத்தொகையை பல் மருத்துவ படிப்பில் சேரும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரிகளில் மாணவ – மாணவிகளின் வருகையை பதிவு செய்ய, பயோ மெட்ரிக் முறையை பின்பற்ற அறிவுறுத்தும்படி, பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க பல் மருத்துவ கவுன்சிலுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...