பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான மான நஷ்ட ஈடு வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாஸ்டர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு நடைமுறையை மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் தனி நீதிபதியால் நியமிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ஜனவரி 30, 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் வழக்கு பட்டியலிடப்படாத நிலையில், இன்று பட்டியலிடப்பட்டு இருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி ஆஜராகவில்லை.

அவர் தரப்பில் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி தனது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,
அந்த மனு நிலுவையில் உள்ளதால் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட மாஸ்டர் நீதிமன்றம், வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிக்கு திரும்ப அனுப்பியுள்ளது.

You may also like...