பழங்குடியினர், பட்டியலினத்தவர்கள் எனக் கூறி, போலி சாதிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலான விதிகளை 8 வாரங்களில் வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுநீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு

பழங்குடியினர், பட்டியலினத்தவர்கள் எனக் கூறி, போலி சாதிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலான விதிகளை 8 வாரங்களில் வகுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சாதிச்சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சி.சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினர் சாதிச் சான்றுகள் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே
விதிகளை வகுத்துள்ளதாகவும், அதன்படி மாநில அளவில் சாதிச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குழுக்கள் அமைக்கவும், போலி சான்றிதழ்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்க கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தவும் வேண்டும் எனவும், பட்டியலினத்தவர், பழங்குடியினர் என பொய் சொல்லி சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரவும் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.

கடந்த 2016ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றமும் விதிகளை வகுத்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மானுடவியல் அறிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சான்றிதழ்கள் வழங்கக்கூடாது என்றும், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோருக்கு ஏற்கனவே சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தால், அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் மறுக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

சாதிச் சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ் பெறும் வகையிலும், போலி சான்றிதழ்கள் பெறுவதை தடுக்கும் வகையிலும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகள், அரசாணைகள் அடிப்படையில் 8 வாரங்களில் விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

போலி சான்றிதழ்களை பெறுவதை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தமிழக அரசு சட்டம் இயற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதனால் சாதிச் சான்று வழங்கக்கூடிய அதிகாதிகளுக்கு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும், தகுதியில்லாதவர்களுக்கு சாதிச் சான்று வழங்குவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...