பாஜக அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டபோது அவர்களை திட்டியதாக பாஜக பிரமுகர்கள் 5 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மார்ச் 10: பாஜக அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டபோது அவர்களை திட்டியதாக பாஜக பிரமுகர்கள் 5 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஜூன் 25ம் தேதி பாமகவை சேர்ந்த சிலர் பாஜக அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது, அங்கு இருந்த வெங்கட்ரமணி, மூர்த்தி, சிவலிங்கம், சீனிவாசன், சதிஷ்குமார் ஆகிய 5 பேர் பாமகவினரை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாகவும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தங்கள்ள மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வெங்கட்ரமணி உள்ளிட்ட 5 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் வி.ரமேஷ் ஆஜராகி, எந்த குற்றமும் நடக்காமல் மனுதாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...