புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்றதை எதிர்த்து புதுவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தற்போது உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் முயற்சிப்பதாக கூறி, தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்ற உத்தரவுகளை ரத்து செய்யக் கோரியும் திமுக எம்.எல்.ஏ. சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை எந்த காரணமும் இல்லாமல் திரும்ப பெறப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை தேர்தல் ஆணையம் நடத்த முயற்சிப்பதால், அத்ற்கு தடை விதிக்கவேண்டும் என்று வாதிட்டார்.

புதுவை தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தல் நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ளதாகவும்,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அரசாணை ,துணை நிலை ஆளுநரின் அறிவுறுத்தலின்படியே திரும்ப பெறப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை அடையாளம் காண ,சம்பந்தப்பட்ட ஆணையத்தையும் வழக்கில் பிரதிவாதியாக சேர்த்து உத்தரவிட்டுள்ளது..

You may also like...