பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த நான்கு மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது குறித்து பொதுநல வழக்கு குழுவுக்கு பரிந்துரை செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த நான்கு மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது குறித்து பொதுநல வழக்கு குழுவுக்கு பரிந்துரை செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ராமாபுரம், மோகல்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் மாணவர்கள் கல்லூரிக்கு தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியவாறு சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, கண்டெய்னர் லாரி, பேருந்தில் உரசியதில், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நான்கு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் R.Y. ஜார்ஜ் வில்லியம்ஸ், தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார்.

அப்போது, நீங்களே ஏன் பொதுநல மனுவாக தாக்கல் செய்யக்கூடாது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் R.Y. ஜார்ஜ் வில்லியம்ஸ், தலைமை நீதிபதி என்ற முறையில் இந்த சம்பவத்தை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக கூறினார்.

மேலும், பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க வழிக்காட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பு குறித்து பொதுநல வழக்கு குழுவுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

You may also like...