https://x.com/sekarreporter1/status/1723958663059292542?t=NGZt_61r4Cev0XimWghB8g&s=08 மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா அவர்கள் கடிதம்

*அரசு வழக்குரைஞர்கள் அலுவலகத்திற்குப் பணி நிமித்தமாக வரும் அனைத்து நிலைக் காவல் துறையினரை மரியாதை குறைவாக நடத்த கூடாது என வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றம், அதன் மதுரைக் கிளை மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுக்கும் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.*

அரசு குற்றவியல் வழக்குரைஞர்களை பணி நிமித்தமாக காவல் துறையினர் சந்திக்க வரும் சமயங்களில், சில அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் காவல் துறையினைரை , ஒருமையில் பேசுவதாகவும் மற்றும் கண்ணியக் குறைவாக நடத்துவதாகவும் வருகிற செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது, வருந்தத்தக்கது. சிலரின் நடவடிக்கையால் ஒட்டு மொத்த அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் மீதும் அவப்பெயர் ஏற்படுகிறது.
நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களைப் போல் பொதுமக்களுக்கு அரணாக விளங்கும் சீருடைப் பணியாளர்களான காவல் துறையினருக்கு உரிய மரியாதை தருவது ஒவ்வொரு அரசு குற்றவியல் வழக்குரைஞர்களின் கடமையாகும்.
நமது அலுவலகம் வரும் காவல்துறையினரை அமர வைத்து, தேவையான வழக்கு விவரங்களைப் பெற வேண்டும். அப்படி அவர்கள் தருகிற விவரங்கள் போதுமானதாக இல்லையெனில், அவர்களின் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய விவரங்களை பெறவேண்டும். நம்மிடம் வருகிற காவல்துறையினருக்கும் நம்மைப் போன்றே பணிச்சுமைகள் மற்றும் மனஉளைச்சல்கள் இருக்கும் என்பதை மனதில் கொண்டு மனித நேயத்தோடு நடத்த வேண்டும்.
வழக்கின் புலன்விசாரனையில் அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்பதால் மரியாதை குறைவாக நடத்துவதோ அல்லது ஒருமையில் பேசுவதோ தீர்வாகாது. அவர் தவறு செய்திருக்கிறார் என தெரிய வந்தால் அடுத்த உயரதிகாரிகளுக்கு அல்லது மாவட்ட எஸ்.பி அல்லது டெபுடி கமிஷ்னருக்கு தெரியப்படுத்துங்கள்.
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதைக் காட்டிலும், நீதியை நிலைநாட்டிட, உண்மையை கண்டறிய, நீதிமன்றத்திற்கு உதவிடுவது மட்டுமே அரசுகுற்றவியல் வழக்குரைஞர்களின் இலக்காக அமையவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நினைவில் கொள்ளவேண்டும். காவல் துறையினர் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் தான் அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் உரிய வாதங்களை முன்வைக்கமுடியும். அதற்குரிய வழக்கு விவரங்களை வழங்க வருகிற காவல்துறையினரை அவர்கள் வகிக்கும் பதவி நிலைப் பார்க்காது பெரிய பதவி வகிப்பவர்கள், சிறிய பதவி வகிப்பவர்கள் என பாகுபாடு பார்க்காமல் அவர்களை சக மனிதராக பாவித்து கண்ணியத்தோடு நடத்தவேண்டும்.
இக்கடிதத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களை அறிவுறுத்தல்களாக கருதாது, இந்த உன்னத நிறுவனத்தினை மேலும் மேன்மைப்படுத்த நம்மை நாமே சரிசெய்து கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் மாநில அரசு குற்றவியல் தலைமை குற்றத்துறை வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

You may also like...