மின்னணு சாட்சியங்களை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. pp hasan mohamad jinna. நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ்

மின்னணு சாட்சியங்களை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த, தீவிர குற்ற வழக்குகளில் சிறப்பு புலன் விசாரணை பிரிவை ஏன் நியமிக்க கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சார்பில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தீவிர குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு பிரிவை அமைத்தது குறித்தும், மின்னணு சாட்சியங்களை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.

மேலும், சென்னையில் உள்ள 12 காவல் நிலையங்களில் தனி புலன் விசாரணை பிரிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஒப்புதல் பெறவேண்டும் என்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உரிய நடவடிக்கைகள் எடுத்ததற்காக தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...