மேல் மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்துள்ள நீர்நிலையை மீட்பது தொடர்பாக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாளை விளக்கமளிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேல் மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்துள்ள நீர்நிலையை மீட்பது தொடர்பாக எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாளை விளக்கமளிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியில் ‘கீழ் மருவத்தூர்’ ஏரி இருந்து வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் உள்ள அரசு நிலங்களில் 300’க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு அலுவலகங்கள், இரயில் பாதைகள் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த இடத்தில் ஒரு பகுதியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் தான் இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை என்பதால் ஆக்கிரமிப்பை அனுமதித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்திருந்தாலும், தற்போது எடுக்க உள்ள நடவடிக்கை தொடர்பாக நாளை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக அனைத்து வழக்குகளையும் நாளை பட்டியலிடவும் அந்த வழக்குடன் இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை நாளை தள்ளி வைத்தனர்.

You may also like...