லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் 908 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2011 – 2016 வரை அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, நிலக்கரி கொண்டு வர செலவிட்டதில் ஆயிரத்து 28 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

மகாநதி நிலக்கரி சுரங்கம் மற்றும் ஈஸ்டர்ன் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவந்த ஒப்பந்ததாரர் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட், துறைமுகத்திற்கு வரியாக கட்டிய பணத்தின் உண்மையான ரசீதுகளை சமர்ப்பிக்காமல், போலியானவற்றை சமர்ப்பித்து பல மடங்கு பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாகவும், அந்த நிறுவனத்துடன், மின்சார வாரிய நிர்வாகத்தினரும் கூட்டு சதியில் ஈடுபட்டு ஊழல் செய்துள்ளதாக புகாரில் குற்றம்சாட்டியிருந்தது.

2011 முதல் 2016 வரை நடந்ததாக கூறி, அதற்கான ஆதாரங்களை 2018 ஆம் ஆண்டு சமர்ப்பித்த நிலையில், அந்த புகாரில் விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது உறுதியாவதாக முடிவெடுத்து, அப்போதைய தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்
பொறியாளர்கள், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் என மொத்தம் 10 பேர் மீது கடந்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி அன்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

தங்கள் நிறுவனம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று நடைபெற்றது.

அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், 908 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதிற்கான உரிய ஆதாரங்கள் உள்ளது என்றும், துறைமுகத்தில் தனியார் ஊழியார்கள் பயன்படுத்திவிட்டு, துறைமுக ஊழியர்கள் என கணக்கு காண்பித்து மின்வாரியத்திடம் பணத்தை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்து, வழக்கை ரத்து செய்க்கூடாது என வாதிட்டார்.

அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் ஆஜராகி,, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் உரிய வரி கட்டாமலே மின்வாரியத்தில் அதற்கான தொகையை அரசிடம் வாங்கியுள்ளது என்றும், மத்திய தணிக்கை துறை அறிக்கையில் இந்த இழப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், டெண்டர் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் வழக்கை வழக்கை ரத்து செய்ய மறுத்து, அதன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...