வனப்பாதுகாப்பு, யானை வழித்தடம், யானைகள் வேட்டை தடுப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

கோவை தடாகம் பகுதியில் செங்கற்சூளைகள் செயல்பட அனுமதித்த சுரங்கத்துறை ஆணையருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளது.

வனப்பாதுகாப்பு, யானை வழித்தடம், யானைகள் வேட்டை தடுப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கற்சூளைகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மூடப்பட்ட நிலையில், அபராத தொகையில் 2 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, செங்கல்களை எடுத்துக் கொள்ளவும், மற்ற அனுமதிகளை பெற்று செங்கற் சூளைகளை தொடர்ந்து செயல்பட அனுமதித்தும் சுரங்கத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

தடாகம் பகுதியில் செங்கற்சூளைகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சுரங்கத் துறை ஆணையர் எப்படி இந்த உத்தரவை பிறப்பிக்க முடியும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் சுரங்கத் துறை ஆணையரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர்.

மேலும், சுரங்கத் துறை ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் தடாகம் பகுதியில் செங்கற்சூளைகள் செயல்படுகின்றனவா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

யானைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்த வழக்கில், கர்நாடகா அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடகா கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரை சிறபு புலனாய்வு குழுவுக்கு உதவி செய்யும் அதிகாரியாக நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

அதேசமயம், சிறப்பு புலனாய்வு குழு அமைத்த பின், மாநிலம் முழுவதும் பல இடங்களில் யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் யானைகள் வழித்தடத்தை கண்டறிய இரு குழுக்களை அமைத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You may also like...