விளையாட்டு சங்கங்களில் அதிகாரத்தைப் பிடிக்க நடக்கும் மோதல்கள். நீதிபதிகள் வேதனை

விளையாட்டு சங்கங்களில் அதிகாரத்தைப் பிடிக்கும் மோதல்கள் காரணமாக, அந்த சங்கங்களின் செயல்பாடுகளை நிலைகுலையச் செய்வதுடன், இளம் விளையாட்டு வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் வருடாந்திர கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு விசாரித்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த குழு, சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்கு முன், தகுதியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விளையாட்டு சங்கங்களில் அதிகாரத்தைப் பிடிக்க நடக்கும் மோதல்கள் தொடர்ந்து நீடிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், இதன்மூலம், சங்கத்தின் செயல்பாடுகளை நிலை குலையச் செய்வதுடன், இளம் விளையாட்டு வீரர்களையும் பாதிக்கச் செய்கிறது எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் தேர்வில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாகா குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...