விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக பேச்சாளருமான ஆர்.பி.வி.எஸ். மணியன்

சென்னை, அக்.4-

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக பேச்சாளருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம் அளித்த புகாரின் பேரில் மணியனை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.

ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் அதே கோர்ட்டில் ஜாமீன் கோரி மணியன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மணியன் சார்பில் ஆஜரான வக்கீல் பால்கனகராஜ், மனுதாரரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். மேலும், மனுதாரர் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், ‘ஏற்கனவே ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வழக்கில் தற்போது சூழ்நிலை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மணியனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மணியன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், சாட்சிகளை கலைக்கக்கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

==========

You may also like...