1,250 வழக்கு வக்கீல்கள் அதிர்ச்சி வக்கீல்கள் கோர்ட்டில் குவிந்தனர்

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய 1,250 வழக்குகளில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் சீமான், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை (எப்.ஐ.ஆர்.,களை) ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 1,250 மனுக்கள், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

ஒரே நாளில் 1,250 மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிட்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமானது என்பதால், அனைத்து வழக்குகளை விசாரித்து, ஒரே தீர்ப்பாக வழங்கக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், நீஹாரிகா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எப்.ஐ.ஆரை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளதாகவும், அதற்கு முரணாக எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு வழக்கும், ஒவ்வொரு நிலையில் இருக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த 1,250 வழக்குகளில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பது குறித்து தனித்தனியா வகைப்படுத்தி அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

You may also like...