3 புதிய சட்டங கள்/ மு.ராமமூர்த்தி (மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்):

மு.ராமமூர்த்தி (மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்):

இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்தபோது, ஆங்கிலேய முறைக்கு இங்குள்ள சட்டங்களை மாற்றும் வேலைகள் தொடங்கிவிட்டன. 1833ல் முதல் சட்டக் கமிஷனை கிழக்கிந்திய கம்பெனி அமைத்தது. அதன் தலைவராக மெக்காலே நியமிக்கப்பட்டார்.

அன்று, இந்தியாவில் அமலில் இருந்த சட்டங்களை மாற்றி புதிய சட்டங்களை கொண்டு வருவது குறித்த முதல் அறிக்கையை அவர் அளித்தார். பின், அரசியல் காரணங்களால் அவர் லண்டனுக்குச் சென்றுவிட்டார்.

1857ல் முதல் இந்தியா சுதந்திரப் போர் நடந்த பிறகு பிரிட்டிஷ் ராணியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்தியா வந்தது. 1858ல் வைஸ்ராய் ஜெனரலின் சட்ட உறுப்பினராக மீண்டும் மெக்காலே வந்தார்.

அவர், முன்னதாக 1833ல் கொண்டு வர நினைத்த சட்டங்களை படிப்படியாக அமல்படுத்தினார். அதன்படி, 1860ல் இந்திய தண்டனைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதில், 511 பிரிவுகள் உள்ளன.

1872ல் இந்திய சாட்சிய சட்டத்தைக் கொண்டு வந்தார். 1873ல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இவை தொடங்கப்பட்ட வருடங்களைக் கணக்கிட்டால் நடப்பு ஆண்டுன் 199 வருடங்களைக் கடந்துவிட்டது.

இந்திய சுதந்திரத்துக்குப் பின், இதுகுறித்து அரசியல் சாசன நிர்ணய சபை விவாதிக்கும் போது, ‘மூன்று சட்டங்களை இந்திய மயமாக்க வேண்டும்’ எனப் பேசினர். அதன்பின், அமைக்கப்பட்ட முதல் சட்ட கமிஷனும் இதை வலியுறுத்தியது.

ஆனால், இதை சீரமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. 1971ல் இந்திரா காந்தி பெரும்பான்மையாக வெற்றி பெற்றவுடன், சட்டக் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார். அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 1873ல் கொண்டு வரப்பட்ட சட்டம், 1973 குற்றவியல் நடைமுறைச் சட்டமாக மாறியது.

அது தான், இன்று வரை நடைமுறையில் உள்ளது. அதன்பின் அமைக்கப்பட்ட சட்டக் கமிஷன் அறிக்கைகளில், ‘காலாவதியாகப் போன ஆங்கிலேய ஆட்சிக்கால சட்டங்களை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும்’ என்ற, பரிந்துரைகள் தொடர்ந்து வந்தன.

வாஜ்பாயின் 1999-2004 என்.டி.ஏ ஆட்சியில், குற்றவியல் சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பாக நீதிபதி வி.எஸ்.மலிமத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, சிவில் நடைமுறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், மலிமத் கொடுத்த அறிக்கையை எதிர்க்கட்சிகளும் பார் கவுன்சிலும் எதிர்த்தன. இதனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. 2014ல் மத்தியில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சிக்கு வந்த பிறகு 10 ஆண்டுகளாக சட்டங்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கின.

நாடு முழுவதும் உள்ள பேராசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்த பின், 2023ல் 3 பழைய சட்டங்களையும் நீக்கிவிட்டு புதிதாக கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது.

தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தை, பாரதிய நியா சன்ஹிதா எனப் பெயர் மாற்றியுள்ளனர். தமிழில் பழங்காலங்களில் சம்கிதை என்ற வார்த்தை இருந்துள்ளது. சம்ஹிதை என்றால் சட்டம் என்று பொருள். தமிழில் நியாயம் என்ற வார்த்தையும் உள்ளது.

தற்போது, 511 பிரிவுகளாக உள்ள இந்திய தண்டனைச் சட்டத்தை 388 பிரிவுகளாக குறைத்துள்ளனர். முந்தைய சட்டத்தில், பாலியல் குற்றங்கள் என்றால் ஆண்கள் மீது மட்டுமே சுமத்தப்பட்டது. இப்போது, ‘அனைத்து பாலினங்களுக்கும் பொருந்தும்’ எனக் கொண்டு வந்துள்ளனர்.

அடுத்து, பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ராஜதுரோக வழக்கு. இது, இந்திய தண்டனைச் சட்டம் 121ன்கீழ் பதியப்பட்டு வந்தது. சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் உள்பட பலர் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பல உச்ச நீதிபதி மன்ற நீதிபதிகள், ‘இந்த சட்டத்தை எதற்காக வைத்திருக்கிறீர்கள். இந்த நாட்டில் ராஜா என்ற ஒருவர் இல்லை. பிறகு எப்படி ராஜ துரோகம் வரும்?’ எனக் கேள்வி எழுப்பினர்.

தற்போது அதை நீக்கிவிட்டு, அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய புரட்சிக் குழு (Armed rebellion against the state) என மாற்றியுள்ளனர். உபா சட்டத்துக்கும் இது பொருந்தும்.

அடுத்து, தமிழகத்தில் ‘குண்டர் சட்டம்’ என அழைக்கப்படுவதைப் போல மகாராஷ்ட்ரா உள்பட பல மாநிலங்களில் வேவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இதை நாடு முழுவதும் பொதுமைப்படுத்திவிட்டனர்.

வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகைகளில் ஐ.பி.சி., உள்ளது. சில குற்றங்களை அந்தந்த பிரிவு போலீசார் தான் கையாள முடியும் என, இருப்பதை மாற்றி, அந்தந்த காவல்நிலையங்களே கையாள முடியும்.

அதேபோல், முன்னெச்சரிக்கை கைதுகளைப் பொறுத்தவரையில், கலெக்டர், எஸ்.பி., அந்தஸ்தில் உள்ளவர்கள் ஒப்புதல் கொடுத்தால் தான் செல்லுபடி ஆகும். இவை, நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் இருந்ததை ஒரே சட்டமாக கொண்டு வந்துவிட்டனர்.

அடுத்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனக் கொண்டு வந்துள்ளனர். பாரத குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்பது இதன் பொருள். இன்று முதல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்ற வார்த்தைகள் புழக்கத்தில் இருக்காது.

அதன்படி, 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய குற்றங்கள் உள்ளன. அதைச் செய்யும் நபர் முன்கூட்டியே தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வசதி உள்ளது.

அவ்வாறு, குற்றத்தை ஒப்புக் கொண்டால் சமூக சேவைகளை (community service) செய்ய வேண்டும். சமூக சேவை அல்லது சிறைத் தண்டனை என்ற முடிவை சம்பந்தப்பட்ட நீதிபதியே இறுதி செய்வார். நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் 3 முதல் 5 வருடங்கள் உள்ள குற்றங்களே அதிக அளவில் நிலுவையில் உள்ளன. இதற்கு

அடுத்து, எப்.ஐ.ஆர் போட்டவுடன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து 180 நாள்களுக்குள் விசாரணையை தொடங்கிவிட வேண்டும் என, கொண்டு வந்துள்ளனர்.

ஐந்து வருடத்துக்கு மேல் உள்ள கடும் குற்றங்களுக்கு 90 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். பழைய சட்டத்தில் எப்.ஐ.ஆர் போட்டு 4 வருடங்களுக்குப் பிறகு கூட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தது.

180 நாள்களுக்குள் குற்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதிய சட்டங்களின்படி, காவல்நிலையங்களில் குற்றவியல் வழக்கை நடத்தும் பிரிவை (Prosecution wing) தொடங்கி, குறிப்பிட்ட கால அளவுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விஷயம், டிஜிட்டல் ஆவணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளன. குற்ற வழக்குகளில் எலக்ட்ரானிக் சாட்சிகள் செல்லுபடியாகும். சி.சி.டி.வி காட்சிகள் வழக்கில் முக்கியப் பங்கு வகிக்கும்.

குற்றம் நடந்த இடத்தில் நான் இல்லை என ஒருவர் கூறினாலும், அவரது வாட்ஸாப் உரையாடலில் குற்றம் தொடர்பான தகவல்கள் இருந்தால், அவருக்கு தண்டனைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, மூன்று சட்டங்களிலும் தரவுகள் திருட்டு. காப்புரிமை பெற்ற விஷயங்களைத் திருடுவது, தனி நபர்களின் விவரங்களை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளன.

தவிர, குற்ற வழக்குகளில் சாட்சிகளை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, உள்ளது. புதிய சட்டத்தில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு ஒருவரை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த நபர் இருக்கும் இடத்தில் இருந்தே வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக பேசலாம்.

இந்த அம்சத்தை பல குற்றவியல் வழக்கறிஞர்கள் எதிர்க்கின்றனர். ஒரு நபர் நேரடியாக கோர்ட்டில் நிற்கும்போது, எந்த பாவனைகளில் பதில் அளிக்கிறார் என்பதை வைத்து கணிக்க முடியும் என்பதால் எதிர்க்கின்றனர். இச்சட்டம் நடைமுறைக்கு வரும் போது தான் அதன் சாதக பாதகங்களை பார்க்க முடியும்.

இந்திய சாட்சிகள் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய சாட்சிய அதினியம் எனக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஆடியோ, வீடியோ காட்சிகளை சமர்ப்பிப்பதற்கு 65(பி)ல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தனர். அதில், குறைபாடுகள் இருந்தன. தற்போது, அனைத்து டிஜிட்டல் ஆதாரங்களும் குற்றவாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்.

இவை, ஒயிட் காலர் குற்றங்களைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஒருவர் குற்றத்தை செய்யும்போது இந்தியாவில் இருந்தால் மட்டுமே வழக்குப் போட முடியும். இப்போது எந்த நாட்டில் இருந்து நிதி மோசடிகளைச் செய்தாலும் தண்டிக்க முடியும். அதற்கான அதிகாரம், போலீஸுக்கு கொடுச்கப்பட்டுள்ளது.

காவல்துறையைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பது காலனியாதிக்க மனநிலை. இனி அப்படிப்பட்ட நிலை இங்கு இருக்காது. கடந்த 75 வருடங்களாக உச்ச நீதிமன்றமும் சட்ட ஆணையமும் கூறியுள்ளதை மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்துறது.

புதிய சட்டங்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்ற கருத்து தமிழகத்தில் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் கடந்த ஓராண்டுகளாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதாகக் கூறி இங்குள்ள சில கட்சிகள் எதிர்க்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்கால சட்டம் என்பது 199 ஆண்டுகள் தான். ஆனால், இந்தியா என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளது. சட்டங்களை மாற்ற வேண்டும் என, 75 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்ததை, தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

You may also like...