சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை மூன்று மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுப்பதாக, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக, எம்.பி.– எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு பதிலளித்து அமலாக்கத் துறை தரப்பில் ed adv n ramesh பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த பதில்மனுவில், வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யும் நிலையில், விசாரணயை முடக்கும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் முக்கிய பங்காற்றியுள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...