அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால் ரகுமான், சாகுல் அமீது ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை .

சென்னை, ஜூன் 27: திருவொற்றியூர் அருகே போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறையும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சிலர் ஐஸ் (எ) மெத்தபெட்டமின் போதை பொருளை விற்பனைக்காக கடத்துவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த 2022 ஜூலை 19ம் தேதி தகவல் வந்தது.

தகவலின் அடிப்படையில், காலடிப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு சென்ற போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அங்கே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த எர்ணாவூர் குப்பத்தை சேர்ந்த ரகுமான் (52), திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த சாகுல் அமீது (70), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அக்பர் பாஷா (42) ஆகியோரிடம் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரகுமானிடம் 60 கிராம் ஐஸ் (எ) மெத்தபெட்டமினும், சாகுல் அமீதிடம் 60 கிராம் மெத்தபெட்டமினும், அக்பர் பாஷாவிடம் 12 கிராம் மெத்தபெட்டமினும் பாலிதீன் கவரில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரிடமும் இருந்த ஐஸ் (எ) மெத்தபெட்டமினை பறிமுதல் செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால் ரகுமான், சாகுல் அமீது ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அக்பர் பாஷாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

You may also like...