லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் தெரிவித்தார்.

மூல வழக்கு ரத்து செய்யப்பட்டாலோ, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலோ, அமலாக்கத் துறை வழக்கை தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க முடியுமா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

சென்னை, பெரம்பூரில் பின்னி நிறுவனத்துக்கு சொந்தமான 14.6 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் திட்டத்துக்கு விற்க, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக சுனி கெட்பாலியா மற்றும் மணிஷ் பார்மர் உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால், அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்யக் கோரி சுனி கெட்பாலியா, மணிஷ் பார்மர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, மூல வழக்கு ரத்து செய்யப்பட்டால், அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை நடத்த முடியாது என உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, அமலாக்க துறை வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்வது அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மூல வழக்கு தகுதி அடிப்படையில் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே அந்த வழக்குக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொருந்தும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தொழில்நுட்ப காரணங்களுக்காக மூல வழக்கு ரத்து செய்யப்பட்டால், அந்த வழக்குகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொருந்தாது எனவும், இதுசம்பந்தமாக விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுனி கெட்பாலியா, மணிஷ் பார்மர் ஆகியோர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் தெரிவித்தார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் முடிவு காணும் வரை இந்த வழக்கை நிலுவையில் வைத்திருக்கலாம் எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

You may also like...