Case against ops filed by edapady advocate LP shanmuga sundaram senior SR Rajagopal அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம்

அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி, அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்த கூடாது என உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு  விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

You may also like...