Craker tender case judge anitha sumanth order சென்னை தீவு திடல் பட்டாசு வழக்கு அதிரடி உத்தரவு

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்துவதற்காக கோரப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாக கோரப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2014ம் ஆண்டு முதல் சென்னை தீவுத் திடலில் பட்டாசு மொத்த விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் விற்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு விற்பனைக்காக கோரப்பட்ட இரு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, இறுதியாக கடந்த செப்டம்பர் 29ம் தேதி டெண்டர் கோரப்பட்டதாகவும், இதற்காக 20 லட்சம் ரூபாய் முன்பணம், உத்தரவாத தொகை 2 லட்சம் ரூபாயுடன், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்த தகுதியும் இல்லாத சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம் என்ற புதிய சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்ததாகவும், போலி ஆவணங்களை சமர்ப்பித்த அந்த சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்தது ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்கவிடாமல் தடுத்ததுடன், புதிய சங்கத்துக்கு டெண்டரை இறுதி செய்ய அரசு அவசரம் காட்டி வருவதால், இந்த டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், தங்கள் நிறுவனத்தின் டெண்டரை ஏற்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

You may also like...