egmore tree cutting case chief justice bench order gp muthukumar argued

சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 12 மரக்கன்றுகளை நட வேண்டுமென தெற்கு ரயில்வேவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் அருள் சென்னை உயர் நீத்மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பசுமை தாயகம் தரப்பில் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி 144 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை 734 கோடியே 91 லட்ச ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன என்றும், இதற்காக 60 முதல் 100 ஆண்டுகள் பழமையான 600 மரங்கள் வெட்டப்படுவதாக தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, தமிழக அரசின் அனுமதி பெற்றுதான் மரங்கள் வெட்டப்படுவதாகவும், அதன் நிபந்தனைகள் முழுமையாக பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

தமிழக அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனம், பூங்கா, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் அடங்கிய மாவட்ட பசுமை குழு உரிய பரிசீலனைகளை செய்ததாகவும், மரங்களை வெட்ட அனுமதித்து மே 10ஆம் தேதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவ்க்த்தார்.

அதன்படி 103 மரங்கள் வேறோடு எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் வைக்கவும், 180 மரங்கள் வெட்டப்படுவதால் அதற்கு மாற்றாக ஒவ்வொரு மரத்திற்கும் தலா 12 மரக்கன்றுகள் வீதம் நட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவை முறையாக நிறைவேற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட் நீதிபதிகள், விதிகளை தெற்கு ரயில்வே பின்பற்றப்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட பசுமை குழுவிற்கும், விதிகள் பூர்த்தி செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கையை இந்த குழுவிடம் தாக்கல் செய்ய ரயில்வேவிற்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அதேசமயம், மேலும், மாற்று இடத்தில் நடுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை முறையாக செய்யாவிட்டால், உடனடியாக நீதிமன்றத்தை நாடலாம் என பசுமை தாயகம் அமைப்பிற்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...