file charge sheet rskj mhc order

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடர்பாக பதிவான வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி திருமாந்துறை சுங்கச்சாவடியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் செல்லதுரையின் குடும்பத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் சுங்கச்சாவடி பணிகளை தடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, அங்குள்ள ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், செங்குறிச்சி மற்றும் திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளில் போதிய காவல்துறை பாதுகாப்பை வழங்குமாறு கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் எஸ்பி-களுக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான தொகை சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் திருச்சி டோல்வே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தி இருந்தது.

ஆனால் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என கூறி பெரம்பலூர் எஸ்.பி. எஸ்.மணிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டோல்கேட் நிறுவனம் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் இந்து கருணாகரன் ஆஜராகி, 15க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும், முன்னாள் ஊழியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாமல் போராடினர் என்றும், திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஊழியர்களைப் பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுங்கச்சாவடியில் நடந்த தாக்குதல் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய விசாரணை நடத்தி 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.-க்கு உத்தர்அவிட்டு காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.

You may also like...