நில அபகரிப்பு. land graabing N Sathiskumar j order notice to vndc

 

சென்னை, ஜூலை 27: வனத்துறைக்கு சொந்தமான நிலம் அபகரிப்பு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் 8 மாதங்களாக அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பு கோரியதையடுத்து செப்டம்பர் 18க்குள் பதில் தருமாறு அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொடைக்கானல் தாலுகா பூலாத்தூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம் அப்போதைய குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் அம்பலவாணன் பினாமிகள் மூலம் வாங்கியதாக கூறி பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2010-2013ம் ஆண்டுகளில் நடந்த இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறைக்கு சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அப்போதைய மாவட்ட கலெக்டர், அப்போதைய தாசில்தாரர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் 35 பேர் வரை கூட்டு சேர்ந்து எனக்கு எதிராக 11 பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது பிரச்னைக்குரிய ஆக்கிரமிப்பு நிலத்தை செந்தில்முருகன் என்பவரிடம் இருந்து வாங்கியதாக அப்போதைய கலெக்டரின் பினாமியாக இருந்த பாண்டியன் என்பவர் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை தந்துள்ளார்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை நடத்தியபோது இந்த நிலத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. வனத்துறை அதிகாரிகள் வெள்ளை காகிதத்தில் என்னிடம் கையெழுத்து வாங்கி அவர்களே பதிவு செய்துள்ளனர் என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆள்மாறாட்டத்திற்கு தாசில்தார், வத்தலக்குண்டு சார்பதிவாளர் உள்ளிட்டோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதற்காக போலி வில்லங்க சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டன.
எனவே, நீதிமன்றத்திற்கு தவறான தகவலை தந்தது, ஆள் மாறாட்டம் செய்தது, ஆவண மோசடி செய்தது உள்ளிட்ட இந்த முறைகேடுகள் தொடர்பாக கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இந்த வழக்கில் பதில் தருமாறு அரசு தரப்புக்கு கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டார். வழக்கில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையி வழக்கு மீண்டும் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் மகாவீர் சிவாஜி, ஜெகநாத் ஆகியோர் ஆஜராகி இந்த வழக்கில் 8 மாதங்களாகியும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றார். இதைக்கேட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்பு துறை ஆணையர், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழக்கில் பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like...