former minister jayakumar son filed case against dmk minister in mhc


புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேட்டை விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக மனு

சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திறக்கப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது. மேலும், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கவும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும் 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதனடிப்படையில், இதுகுறித்து விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

You may also like...